Monday, July 6, 2020

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | சிவதனுசு | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Rama handling Siva Danus

கம்ப இராமயண தமிழ்ச்சாரல்

கார்முகப் படலம்

ஜானகி தேவி சீதையை மணம் புரிய ஏற்றவன் சிவதனுசு என்னும் பலம் வாய்ந்த வில்லை வளைக்க வல்லவனாக இருக்க  வேண்டும்.

ஆனால், அந்த விவாக நிபந்தனையான வில்லை யாராலும் அசைக்க கூட முடியவில்லை. பல மன்னர்கள் தோற்றனர். சீதையின் திருமணம் பற்றி எல்லோரும் கவலை கொண்டிருக்க, ஜனகனின் தலைமை புரோகிதரான சதானந்த முனிவர்,  "சக்கரவர்த்தி திருமகன்" இவ்வில்லை வளைத்தால் உலகம் மகிழும்" என்று கூற,  விஸ்வாமித்திரர் இராமரைப் பார்த்தார். முகக்குறிப்பை புரிந்து இராமர் , வேள்வியில் ஆகுதியான நெய் எப்படி செழிப்புடன் தீயாக எழுமோ, அப்படி எழுந்தார்.

நல்லோர் புன்னகை பூக்க, விண்ணோர் உவக்க, விண்ணும் மலையும் நாண, இராமன் வில்லை நோக்கி நடந்தான்.

பாடல்

ஆடக மால் வரை அன்னது தன்னை,
'தேட அரு மா மணி, சீதை எனும் பொன்
சூடக வால் வளை, சூட்டிட நீட்டும்
ஏடு அவிழ் மாலை இது' என்ன, எடுத்தான்.

பொருள்

சீதைக்குச் சூட்ட மாலையை எடுப்பது போல இராமன் வில்லை எடுத்தான்.

ஆடக மால் வரை அன்னதுதன்னை = மிகப்பெரிய பொன் மலையை போன்ற அந்த சிவ வில்லை
தேட அரு மா மணி = சீதை எனும் பொன்
சூடக வால் வளை சூட்டிட = கிடைத்தற்கரிய சிறந்த இரத்திரனமாம் சீதை எனுப்படுபவளுமான பொன்னாலாகிய கை வளையல்களையணிந்த பெண்ணிற்குச் சூட்டும் பொருட்டு
நீட்டும் ஏடு அவிழ் மாலை இது என்ன எடுத்தான் = மலர்ந்த பூமாலையே என்று எண்ணுமாறு எளிதாகத் தூக்கி எடுத்தான்

சீதைக்குத் தான் அணியப்போகும் மண மாலையை எவ்வளவு எளிதாகவும் அலஷ்யமாகவும் எடுப்பானோ அப்படியே அதை எடுத்தான்.

நயம்

இராமன் மலர்ந்திருக்கும் பூக்கள் கொண்ட மாலையை எடுப்பது போன்று சிவ தனுசை எடுக்கும் போது கூடியிருந்த மக்கள், கண் இமைக்காமல் உற்று கவனித்துக் கொண்டிருந்தாலும், அவர்களுக்கு வேறு ஒன்றுமே தெரியவில்லை.

பின் வரும் பாடலில் கம்பர், இராமனின் வலிமையையும்,  வேகத்தையும் அருமையாக விளக்குகிறார்.

எல்லாரும் இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தனர். இராமன் மண்டியிட்டதையும், வில்லின் நாணைப் பிடித்ததையும் பார்ப்பதற்கு முன்னர், அவன் கையில் எடுப்பதைப் பார்த்தனர். வில் ஒடிந்த ஓசையைக் கேட்டனர். அத்தனை விரைவு.

இராமன் கையில் எடுத்தது தெரியும், அவ்வளவுதான். பின் வில் முறிந்த பேரொலியைத்தான் அடுத்துக் கேட்டார்கள். அந்தச் செயலின் மின்னல் வேகத்தை கம்பர் வேறு எதனுடனும் ஒப்பிட்டுச் சொல்லவில்லை, ஒப்பிட்டால் அசட்டுத்தனமாகப் போய்விடும் என்று நினைத்திருப்பாரோ  என்னவோ ..

நான்கே நான்கு வார்த்தைகள்தான்.

"எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்". அவ்வளவு தான்!

ஆடக மால் வரை அன்னது தன்னை,
'தேட அரு மா மணி, சீதை எனும் பொன்
சூடக வால் வளை, சூட்டிட நீட்டும்
ஏடு அவிழ் மாலை இது' என்ன, எடுத்தான்.


தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

No comments: