Monday, August 10, 2020

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | கோசலையின் மனநிலை | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Kosala's mixed thoughts

கம்ப ராமாயண தமிழ்ச்சாரல்

 

அயோத்யா காண்டம் - மந்திரை சூழ்ச்சிப் படலம்

 

இராமனுக்கு முடிசூட்டு விழா என்பதை அறிந்த கோசலையின் மனநிலை

 

தசரதன் இராமனின் முடிசூட்டு நாள் குறிக்கக் கோள்கள் அறிந்த சோதிடரை கூட்டி சென்றான்.

 

இச்செய்தி சூறைக்காற்று போல நகர் முழுவதும் பரவியது. இராமன்பால் அன்பு கொண்ட நங்கையர் நால்வர் கோசலையிடம் சென்றனர். அவர்களது மட்டற்ற மகிழ்ச்சியை கண்டு ஆனந்தமடைந்த கோசலை காரணம் வினாவினாள்.

 

அவர்கள், “மன்னன், உன் மகனுக்கு மணிமுடி சூட்டுகிறான்என்று மனம் மகிழ்ந்து உரைத்தனர்.

 

அந்த நங்கையர் கூறிய நற்செய்தி, கோசலைக்கு தென்றலின் சுகத்தை தேடித் தந்தன, அதே சமயத்தில் வாடையின் சூடும் அவளைச் சுட்டது.

 

 

பாடல்

 

'சிறக்கும், செல்வம் மகற்கு' என, சிந்தையில்

பிறக்கும் பேர் உவகைக் கடல் பெட்பு அற,

வறக்கும் மா வடவைக் கனல் ஆனதால்

துறக்கும் மன்னவன் என்னும் துணுக்கமே.

 

 

பொருள்

 

சிறக்கும் = சிறப்பினை தரும்;

 

செல்வம் = நாடு என்று கொள்ளலாம்;

 

மகற்கு = மகன் இராமனுக்கு;

 

என = என்று;

 

சிந்தையில் = சிந்தனையில், மனதில், கற்பனையில்;

 

பிறக்கும் பேர் உவகைக் கடல் = தோன்றிய பெரிய மகிழ்ச்சிக் கடல்;

 

பெட்பு அற = பெருமை இன்றி போக;

 

வறக்கும் = வரள வைக்கும் (காய்ந்து போக வைக்கும்);

 

மா = பெரிய;

 

வடவைக் கனல் = கடலை வற்ற வைக்கும் தீ;

 

ஆனதால் = ஆனதால்

 

துறக்கும் = துறக்கும், இழக்கும்;

 

மன்னவன் = தசரதன்;

 

என்னும் துணுக்கமே = என்ற அச்சமானது.

 

நயம்

 

வடவைக் கனல் அவளைத் தீண்டியது, தசரதன் ஆட்சியை விட்டு நீங்குகிறான் என்பதால்.

 

கடல் நடுவே வடவாக்கினி (வடல் + அக்கினி) ஒன்று உள்ளதாக நமது புராணங்களில் நம்பப்படுகிறது.  கடல் நீரின் அளவு அதிகமாகும் போது, வடவை கனல் அதிகப்படியான நீரை வற்றச் செய்துவிடும் (ஊழி காலத்தில் வடவை கனல் மிகப் பெரிதாக உருவெடுத்து அத்தனை கடலையும் வற்ற வைத்துவிடும் என்பது நம்பிக்கை)

 

இராமனுக்கு முடி சூட்டுவது என்றால் அந்த முடி தசரதன் தலையில் இருந்து இறங்க வேண்டும். தசரதன் முடி துறந்தால் தான் இராமன் முடி சூட முடியும்.

 

இராமனுக்கு முடி என்று கேட்ட கோசலை இன்பம், மகிழ்ச்சி கடல் மாதிரி இருந்ததாம்

 

உடனே நினைத்துப் பார்க்கிறாள் ... இராமன் முடி சூட வேண்டுமானால் தசரதன் முடி துறக்க வேண்டுமே, என்று நினைக்கிறாள்.

 

அப்படி நினைத்தவுடன் அவளின் சந்தோஷக் கடல் வடவைக் கனல் எழுந்து கடலை வற்ற வைப்பது மாதிரி வற்றிப் போய் விட்டது

 

இராமன் முடி சூட்டுவதில் கோசலைக்கு இன்பம் தான் என்றாலும், அதில் அவள் பட்ட சின்ன துன்பத்தை , இவ்வளவு நுணுக்கமாக கையாளுவது கம்பனுக்கே சாத்தியம். பின் வரப்போகும் பல மாற்றங்களை குறிப்பால் உணர்த்துகிறாரோ?

 

'சிறக்கும், செல்வம் மகற்கு' என, சிந்தையில்

பிறக்கும் பேர் உவகைக் கடல் பெட்பு அற,

வறக்கும் மா வடவைக் கனல் ஆனதால்

துறக்கும் மன்னவன் என்னும் துணுக்கமே.

 

தொடரும்...

 

அன்புடன்

நா. பிரசன்னலக்ஷ்மி

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | தயரதன் இராமனைத் தழுவுதல் | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Dasaratha hugging Rama

 

கம்பராமயண தமிழ்ச்சாரல்

 

அயோத்யா காண்டம் - மந்திரப்படலம்

 

தயரதன் இராமனைத் தழுவுதல்

 

தசரதன், இராமனுக்கு அரசாட்சி என்ற பொறுப்பை,  அரச பதவியை தருவதற்கு முடிவு செய்து விட்டான்.  இராமனை அழைத்து வரச் சொன்னான். இராமனும் வந்தான்.

 

பாடல்

 

நலம் கொள் மைந்தனைத் தழுவினன்' என்பது என்? நளிநீர்

நிலங்கள் தாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான்,

விலங்கல் அன்ன திண் தோளையும், மெய்த் திரு இருக்கும்

அலங்கல் மார்பையும், தனது தோள், மார்பு, கொண்டு அளந்தான்

 

பொருள்

 

நலம் கொள் = நன்மைகள் நிறைந்த

 

மைந்தனைத் = மகனை (இராமனை)

 

தழுவினன்' என்பது என்? = தழுவினான், எதற்காக

 

நளிநீர் = கடல் சூழ்ந்த

 

நிலங்கள் = இந்த உலகத்தை

 

தாங்குறு நிலையினை = தாங்கக் கூடிய நிலையை

 

நிலையிட நினைந்தான் = அளவிட நினைத்தான்

 

விலங்கல் அன்ன திண் தோளையும் = மலை போன்ற தன்னுடைய தோளையும்

 

மெய்த் திரு இருக்கும் = உண்மையான திரு இருக்கும். அதாவது திருமகள் நிஜமாக இருக்கும்

 

அலங்கல் மார்பையும் = மாலை அணிந்த மார்பையும்

 

தனது தோள், மார்பு, கொண்டு அளந்தான். = தனது தோளையும் மார்பையும் கொண்டு அளந்தான்.


ம்

 

இத்தனை வருடம் தசரதன் அரசை ஆண்டான்.  அந்த ஆட்சிப் பொறுப்பு அவன் தோளில் இருந்தது.   இப்போது அனுவம் எதுவும் இல்லாத இராமனிடம் அரசைக் கொடுக்கப் போகிறான். இராமனால் இந்த பொறுப்பை ஏற்று நடத்த முடியுமா ? அவன் தோள்களுக்கு அந்த வலிமை இருக்கிறதா என்று அறிய, அவனை அணைக்கும் போது  இராமனின்  தோளை தன் தோள்களால் அளந்து பார்த்தானாம்.


நலம் கொள் மைந்தனைத் தழுவினன்என்பது என்நளிநீர்

நிலங்கள் தாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான்,

விலங்கல் அன்ன திண் தோளையும்மெய்த் திரு இருக்கும்

அலங்கல் மார்பையும், தனது தோள், மார்பு, கொண்டு அளந்தான்

 

தொடரும் ....

 

அன்புடன்

நா.பிரசன்ன லக்ஷ்மி

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | தசரதனின் ஒற்றை நரைமுடி | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Dasaratha's Grey hair

 

கம்பராமயண தமிழ்ச் சாரல்

 

அயோத்யா காண்டம் - மந்திரப்படலம்

 

ஒரு நாள் தசரதன் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தான். காதோரம் ஒரே ஒரு நரைமுடி. அந்த நரை முடி அவனிடம் ஏதோ சொல்லுவது போல் இருந்தது. உன்னிப்பாக கேட்டான்.

 

'மன்னனே, நீ இந்த அரசாட்சியை உன் மகனிடம் தந்து விட்டு, கானகம் சென்று தவம் செய்யச் செல் ' என்று சொல்லியது.

 

தசரதனிடம் அந்த நரை முடி சொன்ன பாடல் ...

 

பாடல்

 

மன்னனே! அவனியை

மகனுக்கு ஈந்து, நீ

பன்ன அருந்தவம்

புரி பருவம் ஈதுஎன,

கன்ன மூலத்தினில்

கழற வந்தென,

மின் எனக் கருமை போய்

வெளுத்தது - ஓர் மயிர்.

 

பொருள்

 

மன்னனே! = மன்னவனே

 

அவனியை = இந்த உலகத்தை, இந்த அரசை

 

மகனுக்கு ஈந்து, = உன் மகனிடம் தந்து விட்டு

 

நீ = நீ

 

பன்ன அருந்தவம் = செய்வதற்கு அறிய தவம்

 

புரி = புரிய, செய்ய

 

பருவம் ஈது = சரியான காலம் இது

 

என = என

 

கன்ன மூலத்தினில் = கன்னத்தின் ஓரத்தில்

 

கழற = அதட்டி சொல்ல, கண்டித்து சொல்ல

 

வந்தென = வந்தது போல வந்தது

 

மின் எனக் = மின்னலைப் போல, வெண்மையாக, ஒரு ஒளிக் கற்றை போல

 

கருமை போய் = கருமை நிறம் போய்

 

வெளுத்தது  = வெண்மையாக வந்தது

 

ஓர் மயிர் = ஒரே ஒரு முடி

 

 

தசரதனின் காதோரம் தோன்றிய இந்த ஒற்றை நரைமுடி பின்பு இராவணனின் பத்து தலை அகந்தையை வீழச்செய்தது

 

தொடரும்...

 

அன்புடன்

நா. பிரசன்னலஷ்மி