Monday, August 10, 2020

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | தயரதன் இராமனைத் தழுவுதல் | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Dasaratha hugging Rama

 

கம்பராமயண தமிழ்ச்சாரல்

 

அயோத்யா காண்டம் - மந்திரப்படலம்

 

தயரதன் இராமனைத் தழுவுதல்

 

தசரதன், இராமனுக்கு அரசாட்சி என்ற பொறுப்பை,  அரச பதவியை தருவதற்கு முடிவு செய்து விட்டான்.  இராமனை அழைத்து வரச் சொன்னான். இராமனும் வந்தான்.

 

பாடல்

 

நலம் கொள் மைந்தனைத் தழுவினன்' என்பது என்? நளிநீர்

நிலங்கள் தாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான்,

விலங்கல் அன்ன திண் தோளையும், மெய்த் திரு இருக்கும்

அலங்கல் மார்பையும், தனது தோள், மார்பு, கொண்டு அளந்தான்

 

பொருள்

 

நலம் கொள் = நன்மைகள் நிறைந்த

 

மைந்தனைத் = மகனை (இராமனை)

 

தழுவினன்' என்பது என்? = தழுவினான், எதற்காக

 

நளிநீர் = கடல் சூழ்ந்த

 

நிலங்கள் = இந்த உலகத்தை

 

தாங்குறு நிலையினை = தாங்கக் கூடிய நிலையை

 

நிலையிட நினைந்தான் = அளவிட நினைத்தான்

 

விலங்கல் அன்ன திண் தோளையும் = மலை போன்ற தன்னுடைய தோளையும்

 

மெய்த் திரு இருக்கும் = உண்மையான திரு இருக்கும். அதாவது திருமகள் நிஜமாக இருக்கும்

 

அலங்கல் மார்பையும் = மாலை அணிந்த மார்பையும்

 

தனது தோள், மார்பு, கொண்டு அளந்தான். = தனது தோளையும் மார்பையும் கொண்டு அளந்தான்.


ம்

 

இத்தனை வருடம் தசரதன் அரசை ஆண்டான்.  அந்த ஆட்சிப் பொறுப்பு அவன் தோளில் இருந்தது.   இப்போது அனுவம் எதுவும் இல்லாத இராமனிடம் அரசைக் கொடுக்கப் போகிறான். இராமனால் இந்த பொறுப்பை ஏற்று நடத்த முடியுமா ? அவன் தோள்களுக்கு அந்த வலிமை இருக்கிறதா என்று அறிய, அவனை அணைக்கும் போது  இராமனின்  தோளை தன் தோள்களால் அளந்து பார்த்தானாம்.


நலம் கொள் மைந்தனைத் தழுவினன்என்பது என்நளிநீர்

நிலங்கள் தாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான்,

விலங்கல் அன்ன திண் தோளையும்மெய்த் திரு இருக்கும்

அலங்கல் மார்பையும், தனது தோள், மார்பு, கொண்டு அளந்தான்

 

தொடரும் ....

 

அன்புடன்

நா.பிரசன்ன லக்ஷ்மி

No comments: