Monday, July 6, 2020

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | இராமனின் அழகு | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Rama's Divine Beauty

கம்ப இராமயண தமிழ்ச்சாரல்

உலாவியற் படலம்

இராமன் மிதிலை நகரிலே உலா வந்த போது , வீதி வீதியாய் வீடுகளில் உள்ள பெண்களெல்லாம் தலைவாயிலுக்கு ஓடி வந்து இராமனை காணுகிறார்கள். இரானது திவ்விய அழகு எப்படி வசீகரக்கிறது என்று கம்பர் கூறுகிறார்.

பாடல்

தோள்கண்டார் தோளே கண்டார்
தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்
தடக்கை கண்டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கொண்ட சமயத்து அன்னான்
உருவு கண்டாரை ஒத்தார்

பொருள்

தோள்கண்டார் = இராமனின் தோள்களை கண்டவர்கள்

தோளே கண்டார் = அந்த தோளை மட்டும் தாம் பார்க்க முடியும். அதை விட்டு அவர்கள் கண்களை எடுக்க முடியாது, அவ்வளவு அழகு

தொடுகழல் = கழல் என்ற ஆபரணம் அணிந்த 

கமலம் அன்ன = (கழல் எப்போதும் தொட்டு கொண்டிருக்கும்) தாமரை போன்ற

தாள்கண்டார் = அடிகளை கண்டவர்கள்

தாளே கண்டார் = அந்த திருவடிகளை மட்டுமே கண்டார்

தடக்கை கண்டாரும் = கையை கண்டவரும்

அஃதே = அதே போல் கையை மட்டும் கண்டனர்

வாள்கொண்ட = வாள் போன்ற கூரிய

கண்ணார் = கண்களை உடைய பெண்கள்

யாரே வடிவினை முடியக் கண்டார் = யாருமே அவன் முழு அழகையும் காணவில்லை

ஊழ்கொண்ட = எப்போது தோன்றியது என்று அறியா காலம் தொட்டு உள்ள

சமயத்து அன்னான் = மதங்களில் உள்ள கடவுளின்

உருவுகண் டாரை ஒத்தார் = உருவத்தை கண்டவர்களை போல அந்த பெண்கள் இருந்தார்கள்.

நயம்

இராமனின் மேனி அழகு பற்றிய பாடலாக அமைத்து , அதன் மூலம் இறையாண்மை இயல்பை கம்பர் நயம்பட கூறுகிறார்.

எப்படி கடவுளை முழுமையாக கண்டு கொள்ள முடியாதோ அது போல இராமனின் அழகையும் முழுமையாக கண்டு உணர முடியாதாம்.

செளந்தர்ய ஈடுபாட்டை வைத்துக் கொண்டு, சமயவாதிகள் ஒவ்வொருவரும் இறைவனது திருஉருவில், ஒவ்வொரு அம்சத்தையே காண்கிறார்கள் என்ற அற்புத உண்மையையும் கவிச்சக்கரவர்த்தி எளிதாகவும் சுவையாகவும் விளக்குகிறார்.

தோள்கண்டார் தோளே கண்டார்
தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்
தடக்கை கண்டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கொண்ட சமயத்து அன்னான்
உருவு கண்டாரை ஒத்தார்


தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

1 comment:

Unknown said...

Super
Really our life time is not enough to visualize the divine beauty of God
Simple but superb explanation