Monday, July 6, 2020

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | அகலிகை | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Agalya

கம்ப இராமாயண தமிழ்ச்சாரல்

அகலிகைப் படலம்

அகலிகை சாபம் பெற்றதும், இராமனின் பாதத்துளி  பட்டதும் அகலிகை சாப விமோசனம் அடைவதும், விசுவாமித்திரர் இராமனின் வீரத்தையும் கருணையையும் விதந்தோதுவதும் இந்த படலத்தின் பாடல்களில் கூறப்பட்டுள்ளது.

பாடல்

கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல்-துகள் கதுவ,
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு, உருவம் 
கொண்டு, மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப,
பண்டை வண்ணமாய் நின்றனள்; மா முனி பணிப்பான்:

பொருள்

கண்ட கல்மிசை = (அவ்வாறு) கண்ட கல்லின்மேலே;
காகுத்தன் கழல் துகள் = இராமனது திருவடித் துகள்;
கதுவ = பட்டதால்;
உண்ட பேதைமை = (தான்) மனத்திற் கொண்டுள்ள அறியாமையாகிய; 
மயக்கு அற = இருள் மயக்கம் நீங்குமாறு;
வேறுபட்டு  = தனது  அஞ்ஞானமாகிய அறியாமை  நிலை மாறி;
உருவம் கொண்டு = உண்மை வடிவம் (புது ஞானஸ்வரூபி) அடைந்து; 
மெய் உணர்பவன் = உண்மையான தத்துவ ஞானம் பெற்றவன்;
கழல் கூடியது ஒப்ப = பரமனது
திருவடிகளை அடைவதைப் போல;
பண்டை வண்ணமாய் = (அந்த
அகலிகை) முன்னைய வடிவத்தோடு;
நி்ன்றனள் = எழுந்து  நின்றனள்;
மா முனி பணிப்பான் = (அதனைக்  கண்ட) விஸ்வாமித்திரன் இராமனை நோக்கிப் பின்வருமாறு கூறினான்.

(விஸ்வாமித்திரன் கூறுவது வேறு பாடலில் விளக்கப்பட்டுள்ளது. அதன் பொருட்சுருக்கம் பின்வருமாறு : தேவர் கோமான் இந்திரனுக்கு உடம்பில் ஆயிரம் கண்கள் தோன்றும்படியும், இவள் கல்லாகும்படியும் கௌதம முனிவர் சாபம் தர, கல்லாகி நின்றவள் இவள் என்று விசுவாமித்திரன் கூறினான்)

நயம்

இராமனின் வில்லின் இரு முனைகளிலும் ஸ்ரீராமன் விளங்குகிறான்.

(இந்த இரண்டு முனைகளையும் ஒரு பொதுப் பெயரால் வழங்குவதுண்டு – அதுதான் “தனுஷ்கோடி” – இராம தனுசின் இரு கோடிகள்.)

கோதண்டத்தின் மேல்முனையில் இராமனின் திருமுகத்தை, கடுந்தவம் புரிந்த யோகியர் கண்டு, பெற்றனர் பேரின்பம்.

“முறுவல் எய்திய நன்று ஒளிர் முகத்தை” என்பது கம்பனின் சொல்லாடல்.

கோதண்டத்தின் கீழ்முனையில் ஒன்றுமே செய்யாமல் இராமன் வரவுக்காக காத்திருந்த கல்லும் பெற்றது பிறவிப் பேறு! கீழ்முனையில் இராம பிரானின் திருப்பாதங்கள் விளங்குகின்றன. இராமனின் பாதங்களின் மகிமையை எல்லோரும் அறிவோம்.

இராமன் பெரியோர்களுக்கு மரியாதை அளிப்பதில் சிறந்தவன். அவனுடைய கால் பட்டு அகலிகை உயிர்த்தெழுந்தாள் என்று  கம்பர் சொல்லவில்லை.

ஏனென்றால் பெற்ற தாய்க்கும் முன்னதாகவே இவள் இராமனை நெஞ்சில் கருக் கொண்டாள். அதனால் கம்பர் இங்கே மூலநூலில் இருந்து சற்றே மாறினார்.

இராமனின் கால் படவில்லை, ஆனால் அவன் நடந்து வந்த போது,  அவன் கால் பட்டு தெறித்த துகள் கல்லென சமைந்திருந்த அகலிகையின் மீது பட்டது என்கிறார். இராமன் காலில் இருந்து கழண்ட துகளினாலேயே அகலிகை சாப விமோசனம் பெற்று தன் பண்டைய வடிவம் பெற்று எழுந்து நின்றாள், என்கிறார் கம்பர்.

தாடகை வதத்தில் வில் எய்த "கை வண்ணம்" ... அகலிகை சாப விமோசனத்தில் துகள் பட்ட “கால் வண்ணம்” என்று பாடும் கம்பனின் சொல்நயம், பின் வேறு படலத்தில் "தோள் வண்ணம்" பற்றியும் பேசும்.

கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல்-துகள் கதுவ,
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு, உருவம்
கொண்டு, மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப,
பண்டை வண்ணமாய் நின்றனள்; மா முனி பணிப்பான்:


தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

No comments: