Monday, July 6, 2020

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | கோசலை நாட்டின் வளம் | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Fertile Kosala Country

கம்ப இராமாயண தமிழ்ச்சாரல்

கோசலை நாட்டின் வளம்

இயற்கை அழகு வாய்ந்த நாட்டின் ஆரமாய் விளங்குவது ஆறே ஆகும்.

ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்பது ஆன்றோர் வாக்கு.

நதியே நாட்டை அழகு செய்கின்றது. நீர்வளம் அமைந்த நிலமே நாடாகுமென்று வள்ளுவர் போற்றுகிறார்.

நாடென்ப நாட வளந்தரு நாடல்ல
நாட வளத்தகு நாடு
                                                  (குறள் 739)


மக்கள் மெய் வருத்தப் பயனளிக்கும் நிலம் நாடாகாதென்றும், இயற்கையின் வளம் சுரக்கும் இனிய நிலமே நாடாகுமென்றும் வள்ளுவர் கூறும் கருத்து நன்கு விளங்குகின்றது.

நதியே நாட்டு உயிராக இருந்ததால் அதன் பெருமையை வள்ளுவர் போற்றுகிறார்.

கம்பன் கோசல நாட்டை ஆற்றினை அணியாக அணிந்த நாடு என்கிறார்.

இதன் மூலமாக அந்த நிலத்தின் தன்மை விளங்குகிறது.

கோசலம் என்றால் மயில். மயில்கள் நிறைய உள்ள நாடு. மயில் நிறைய இருக்கிறது என்றால், மழை நன்றாக பெய்கிறது என்று அர்த்தம். மழை பெய்தால், பயிர் விளையும், பசி இருக்காது, கலையும் பக்தியும் நிறைந்து இருக்கும். சண்டை சச்சரவு இருக்காது.

அந்த நாட்டின் மக்கள் நெறி பிறழாமல் வாழ்ந்தார்கள்.

மனிதர்களை குற்றங்களுக்கு உட்படுத்துவது புலன்கள், அதாவது அவை தூண்டும் ஆசைகள்.

புலன்கள் அதற்குரிய பொருளை பார்த்துவிட்டால் உடனே அம்பு போல் பாயும். பாய்கின்ற அம்பு  இலக்கை தைக்கும்; விட்ட அம்பை திருப்பி பிடிக்க முடியாது;

ஐம்பொறிகளை அம்பு என்கிறார் கம்பர். தைப்பதால்; விட்டால் பிடிக்க முடியாது என்பதால்; வேகமாக செல்வதால்.

பெண்களுக்கு கண்கள், ஆண்களின் உணர்ச்சிகளை தூண்டும் வலிமையுடையவை.
பெண்களின் கண்கள் நெறியில் நிற்கா விட்டால், ஆண்களின் ஐம்பொறிகளும் நிலையில் நில்லாது.

அப்படிப்பட்ட வலிமை பெற்ற கண்கள், கோசலை நாட்டில் ஒரு நெறியில் நின்றன.

பாடல்

ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்
காசுஅலம்பும் முலையவர் கண்எனும்
பூசல் அம்பும் நெறியின் புறஞ் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவோம்

        (ஆற்றுப்படலம் பாடல் 12)

என்கிறார் கம்பர்.

பொருள்

சலம் = நடுக்கம், உதறுதல், அலைபாயுதல்
ஆ + சலம் = மிகுந்த (அ) பெரிய சலம்.

புலன்கள் ஒன்றில் ஒன்றுக்கு தாவிக் கொண்டே இருக்கும். (விளக்கிருக்க தீ தேடும் மனம்)

புரி = புரிகின்ற, செல்கின்ற, அலைகின்ற

ஐம் பொறி = ஐந்து பொறிகளான

வாளியும் = அம்புகளும்

காசு அலம்பு = வைரம் வைடூரியம் போன்ற விலை உயர்ந்த மணிகளால் ஆன கழுத்தில் அணியும் அணிகலன்கள் அசைந்து ஆட

காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து என்கிறது  திருப்பாவை.

முலையவர் = மார்பங்களை உடையவர்  (பெண்கள்)

கண் எனும் = கண்கள் என்ற

பூசல் அம்பும் = சண்டை பிடிக்கும் அம்பும்.

நெறியின் புறம் செலாக் = வழி தவறி செல்லாத

கோசலம் = கோசலம் என்ற நாட்டின்

புனை ஆற்று அணி கூறுவாம் = ஆற்றினை அணியாக அணிந்த நிலை கூறுவாம்.

அங்கு ஓடும் நதி, அந்த ஊருக்கு மாலை போட்ட மாதிரி இருக்கிறதாம்.

நயம்

ஒரு நாட்டின் வருணனைதான் என்றாலும் எவ்வளவு நுணுக்கமாக மக்களின் வாழ்வியல் நெறியை விளக்குகிறார்.

எவ்வளவோ வளங்களைப் பற்றி பின்னே கூறினாலும்,  அவை எல்லாவற்றையும் விட மிக சிறந்த வளம் எது என்றால்,  அம்பும் நெறியின் புறஞ் செலாக் கோசலம் என்பதுதான்.

எனவே, மக்களாக வாழப் பிறந்தவர்கள்,  மிக பண்புடையவர்களாக,  பொறிபுலன்களை அடக்கி ஆள்பவராக வாழ்வது தான் அவர்கள் சிறந்தவர் ஆவதற்குரிய அடிப்படையாகும், என்பதை இப்பாடலின் வழியாக கம்பர் மெய்ப்பித்துக் காட்டியிருப்பதை உணர முடிகிறது.

ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்
காசுஅலம்பும் முலையவர் கண்எனும்
பூசல் அம்பும் நெறியின் புறஞ் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவோம்


தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

No comments: