Monday, July 6, 2020

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | இராமன் சீதை மணம் | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Sita Rama Kalyanam

கம்ப இராமயண தமிழ்ச்சாரல்

கடிமணப்படலம்

ஸ்ரீ இராமன் சீதையின் கையைப் பற்றி தீ வலம் வரும் பாடல்

பாடல்

வெய்ய கனல்தலை வீரனும், அந் நாள்,
மை அறு மந்திரம் மும்மை வழங்கா,
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தே,
தையல் தளிர்க் கை தடக் கை பிடித்தான்

பொருள்

வெய்ய  கனல்  தலை = வெம்மை  மிக்க  தீயின்கண்;
வீரனும்  அந்நாள் = மாவீரனாகிய  இராமபிரான்  அப்பொழுது;
மையறு  மந்திரம்  மும்மை வழங்கா = குற்றமற்ற மந்திரங்களை மும் முறை கூறி; 
நெய் அமை ஆவுதி  யாவையும்  நேர்ந்தே = நெய்யோடு கூடிய
அவியுணவு யாவற்றையும் பெய்தான் (அதன்பின்);
தையல் தளிர்க்கை தடக்கை பிடித்தான் = அழகிய சீதையினுடைய தளிர் போன்ற மெல்லிய கரத்தினைத் தனது அகன்ற திருக்கரத்தாற் பற்றினான்.

நயம்

மும்மை வழங்குதல் என்பது மந்திரத்தை உச்சரித்து நெய்யை மும்முறை மண்ணுதல் என்பர்.

“நெய்யை முனை  முதிர் தருப்பை தன்னால்  மந்திரத்து அமைய முக்கால் மண்ணி” என்று சீவகசிந்தாமணி (2465)  நூலில் உள்ள பாடல் இந்த மரபை பேசுகிறது.

அறம் தளிர்ப்பதற்கு ஆவனவெல்லாம் புரிய உள்ள கை என்றும் பொருள்பட
தோன்ற, “தையல் தளிர்க்கை தடக்கை பிடித்தான்” என்றார் கம்பர்.


வெய்ய கனல்தலை வீரனும், அந் நாள்,
மை அறு மந்திரம் மும்மை வழங்கா,
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தே,
தையல் தளிர்க் கை தடக் கை பிடித்தான்


 தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

No comments: