Monday, July 6, 2020

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | மிதிலை காட்சி | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Mithila Kingdom

கம்ப இராமயண தமிழ்ச்சாரல்

மிதிலை காட்சி படலம்

விஸ்வாமித்திரன் முன்னே நடக்க, இராமனும் அவன் தம்பி இலக்குவனும் பின்னால் வருகிறார்கள்.

மிதிலை நகர எல்லைக்குள் கால் பதிக்கிறார்கள்.

அந்த ஊர் மதில்கள்மீது கொடிகள் பறக்கின்றன.

பாடல்

'மை அறு மலரின் நீங்கி,
யான் செய் மா தவத்தின் வந்து,
செய்யவள் இருந்தாள்' என்று,
செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக்
கடி நகர், கமலச் செங் கண்
ஐயனை, 'ஒல்லை வா' என்று
அழைப்பது போன்றது அம்மா!

பொருள்

மை அறு மலரின் நீங்கி = குற்றமற்ற தாமரை மலரை விட்டுப் பிரிந்து;

யான் செய் மாதவத்தின் = நான் புரிந்த மிகப் பெரிய தவத்தால்;

வந்து செய்யவள் இருந்தாள் = திருமகள் என்னிடம் வந்து பிறந்துள்ளாள்;

என்று செழுமணிக் கொடிகள் என்னும் = என்று கூறிப் பெரிய அழகிய கொடிகள்  என்கின்ற;

கைகளை  நீட்டி = (தன்) கைகளை மேலும் கீழுமாக அசைத்துக் காட்டி (அவற்றால்);

அந்த கடிநகர் = காவல் மிக்க அந்த மிதிலா நகரம்;

கமலம் செங்கண் ஐயனை = தாமரை போன்ற கண்களைக் கொண்ட இராமனை;

ஒல்லை வா என்று = விரைவில் வந்து சேர்க என்று;

அழைப்பது போன்றது = அழைப்பதைப் போன்றுள்ளது.

நயம்

அணி: தன்மைத் தற்குறிப்பேற்ற அணி.

உருவகம் : கொடிகளாகிய  கைகள்.

இராமன் ஏன் மிதிலைக்குள் வரவேண்டும்?

காரணம் இருக்கிறது.

‘மை அறு மலரின் நீங்கி, யான் செய் மா தவத்தின் வந்து செய்யவள் இருந்தாள்’ என்று அந்தக் கொடிகள் சொல்வதாகக் கம்பர் வர்ணிக்கிறார்.

குற்றமில்லாத தாமரை மலரை விட்டு நீங்கிய திருமகள், எங்கள் நகரம் செய்த தவத்தினால் இங்கே சீதையாக வந்து பிறந்திருக்கிறாள். ஆகவே, இராமா நீ இங்கே வா, அவளுடைய கைத்தலம் பற்றிக் கொள்!

இராமன் மிதிலை அருகிலே செல்லும் போது, அந்நகரத்து மதில்கள் மேலுள்ள கொடிகள் அசைவது, "திருமகள் தன்னிடத்தில் சீதையாகப் பிறந்துள்ளாள்" என்பதைக் குறிப்பாகச் சொல்லி அவளுக்குக் கணவனாவதற்கு ஏற்ற இராமனை விரைவிலே வந்து மணம் புரியுமாறு கைகாட்டி அழைப்பது போன்றுள்ளதாக கம்பர் கூறுகிறார்.

'மை அறு மலரின் நீங்கி,
யான் செய் மா தவத்தின் வந்து,
செய்யவள் இருந்தாள்' என்று,
செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக்
கடி நகர், கமலச் செங் கண்
ஐயனை, 'ஒல்லை வா' என்று
அழைப்பது போன்றது அம்மா!


தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | அகலிகை | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Agalya

கம்ப இராமாயண தமிழ்ச்சாரல்

அகலிகைப் படலம்

அகலிகை சாபம் பெற்றதும், இராமனின் பாதத்துளி  பட்டதும் அகலிகை சாப விமோசனம் அடைவதும், விசுவாமித்திரர் இராமனின் வீரத்தையும் கருணையையும் விதந்தோதுவதும் இந்த படலத்தின் பாடல்களில் கூறப்பட்டுள்ளது.

பாடல்

கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல்-துகள் கதுவ,
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு, உருவம் 
கொண்டு, மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப,
பண்டை வண்ணமாய் நின்றனள்; மா முனி பணிப்பான்:

பொருள்

கண்ட கல்மிசை = (அவ்வாறு) கண்ட கல்லின்மேலே;
காகுத்தன் கழல் துகள் = இராமனது திருவடித் துகள்;
கதுவ = பட்டதால்;
உண்ட பேதைமை = (தான்) மனத்திற் கொண்டுள்ள அறியாமையாகிய; 
மயக்கு அற = இருள் மயக்கம் நீங்குமாறு;
வேறுபட்டு  = தனது  அஞ்ஞானமாகிய அறியாமை  நிலை மாறி;
உருவம் கொண்டு = உண்மை வடிவம் (புது ஞானஸ்வரூபி) அடைந்து; 
மெய் உணர்பவன் = உண்மையான தத்துவ ஞானம் பெற்றவன்;
கழல் கூடியது ஒப்ப = பரமனது
திருவடிகளை அடைவதைப் போல;
பண்டை வண்ணமாய் = (அந்த
அகலிகை) முன்னைய வடிவத்தோடு;
நி்ன்றனள் = எழுந்து  நின்றனள்;
மா முனி பணிப்பான் = (அதனைக்  கண்ட) விஸ்வாமித்திரன் இராமனை நோக்கிப் பின்வருமாறு கூறினான்.

(விஸ்வாமித்திரன் கூறுவது வேறு பாடலில் விளக்கப்பட்டுள்ளது. அதன் பொருட்சுருக்கம் பின்வருமாறு : தேவர் கோமான் இந்திரனுக்கு உடம்பில் ஆயிரம் கண்கள் தோன்றும்படியும், இவள் கல்லாகும்படியும் கௌதம முனிவர் சாபம் தர, கல்லாகி நின்றவள் இவள் என்று விசுவாமித்திரன் கூறினான்)

நயம்

இராமனின் வில்லின் இரு முனைகளிலும் ஸ்ரீராமன் விளங்குகிறான்.

(இந்த இரண்டு முனைகளையும் ஒரு பொதுப் பெயரால் வழங்குவதுண்டு – அதுதான் “தனுஷ்கோடி” – இராம தனுசின் இரு கோடிகள்.)

கோதண்டத்தின் மேல்முனையில் இராமனின் திருமுகத்தை, கடுந்தவம் புரிந்த யோகியர் கண்டு, பெற்றனர் பேரின்பம்.

“முறுவல் எய்திய நன்று ஒளிர் முகத்தை” என்பது கம்பனின் சொல்லாடல்.

கோதண்டத்தின் கீழ்முனையில் ஒன்றுமே செய்யாமல் இராமன் வரவுக்காக காத்திருந்த கல்லும் பெற்றது பிறவிப் பேறு! கீழ்முனையில் இராம பிரானின் திருப்பாதங்கள் விளங்குகின்றன. இராமனின் பாதங்களின் மகிமையை எல்லோரும் அறிவோம்.

இராமன் பெரியோர்களுக்கு மரியாதை அளிப்பதில் சிறந்தவன். அவனுடைய கால் பட்டு அகலிகை உயிர்த்தெழுந்தாள் என்று  கம்பர் சொல்லவில்லை.

ஏனென்றால் பெற்ற தாய்க்கும் முன்னதாகவே இவள் இராமனை நெஞ்சில் கருக் கொண்டாள். அதனால் கம்பர் இங்கே மூலநூலில் இருந்து சற்றே மாறினார்.

இராமனின் கால் படவில்லை, ஆனால் அவன் நடந்து வந்த போது,  அவன் கால் பட்டு தெறித்த துகள் கல்லென சமைந்திருந்த அகலிகையின் மீது பட்டது என்கிறார். இராமன் காலில் இருந்து கழண்ட துகளினாலேயே அகலிகை சாப விமோசனம் பெற்று தன் பண்டைய வடிவம் பெற்று எழுந்து நின்றாள், என்கிறார் கம்பர்.

தாடகை வதத்தில் வில் எய்த "கை வண்ணம்" ... அகலிகை சாப விமோசனத்தில் துகள் பட்ட “கால் வண்ணம்” என்று பாடும் கம்பனின் சொல்நயம், பின் வேறு படலத்தில் "தோள் வண்ணம்" பற்றியும் பேசும்.

கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல்-துகள் கதுவ,
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு, உருவம்
கொண்டு, மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப,
பண்டை வண்ணமாய் நின்றனள்; மா முனி பணிப்பான்:


தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | தாடகை வதை | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Vanquishing of Demon Tataka

கம்ப இராமாயண தமிழ்ச்சாரல்

தாடகை வதைப் படலம்

ராமனுடைய வில்லாற்றல் முதன்முறையாக விஸ்வாமித்திரர் மூலமாக வெளிப்படுகிறது.

தன் யாகம் காக்கத் தசரதனிடம் இராமனைத் தரும்படி கேட்கிறார். யாகசாலையைப் பாதுகாக்கும் பொறுப்பை இராமன் ஏற்க வேண்டும் என்கிறார். சிறுவனான இராமனை அவருடன் அனுப்ப முதலில் மன்னன் ன தயங்கினாலும் வசிஷ்டரின் அறிவுரையின்படி அனுப்பி ன வைக்கிறான் தசரதன்.

யாகரட்சணத்திற்கு முன்பாகவே ராமன் தாடகையை எதிர்கொள்ள நேரிடுகிறது. “இந்தத் தாடகை முறைநின்ற உயிரெல்லாம் தன் உணவெனக் கருதும் தன்மையுடையவள்” என்று விஸ்வாமித்திரர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தாடகை பயங்கர உருவம் பெற்று வருகிறாள்.

இப்படி வரும் தாடகையை அம்பு எய்து வதைக்க வேண்டும் என்று விஸ்வாமித்திர்ர் எண்ணுகிறார். ராமனுக்கும் முனிவரின் எண்ணம் புரிகிறது. ஆனாலும் ராமன் உடனே அம்பு தொடுக்கவில்லை. ஏன்? “பெண்ணென மனத்திடை பெருந்தகை நினைத்தான்.” ஆனால் முனிவரோ, “ராமா, உயிர்க்குலத்தையே கருவறுத்து வரும் இவளையா நீ பெண்ணென்று நினைக்கிறாய்? இவளுடைய பாவச்சுமையை ஒழிக்க வேறு வழியே இல்லை. “ஆறி நிற்பது அருளன்று.” எனவே அரக்கியைக் கொன்றுவிடு என்று ஆணையிடுகிறார். இதற்குள் தாடகை பாறைக்கற்கலை வீசிவிடுகிறாள். எனவே தற்காப்புக்காக இராமன் அம்பு தொடுக்கிறான்.


பாடல்

சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம், கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது, அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என, போயிற்று அன்றே!


பொருள்

சொல் ஒக்கும் கடிய வேகச் சுடுசரம் = நிறைமொழி  மாந்தரின் சாபச் சொற்களை ஒத்த கடிய வேகமுடைய ஒரு சுடுசரத்தை
கரிய செம்மல் அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும் = கரிய நிறமும், அழகும் உடைய, இராமபிரான் இருள் போன்ற நிறத்தை உடைய தாடகையின் மீது செலுத்தி  விடவே;
வயிரக் குன்றக்கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது = அந்த அம்பு வைரம் பாய்ந்த கல் போன்ற அத்தாடகையின்    நெஞ்சில் தங்கியிராமல்;
அப்புறம்  கழன்று = நெஞ்சில் பாய்ந்து பின் முதுகின் புறமாகக் கழன்று;
கல்லாப்புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என = கல்வி அறிவில்லாத கீழோருக்கு நல்லவர்கள் சொன்ன நல்ல பொருளைப் போல;
போயிற்று அன்றே = ஓடிப்போய்விட்டது

நயம்

‘சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசரம்’ என்கிறான் கம்பன்.

வேகத்துக்கு உவமையாக  காற்றின் வேகம் , மனோவேகம் என்பது ஒரு பொதுவான உவமை. மனதில் ஒன்றை நினைத்த தருணத்தில், அங்கே இருப்போம் நாம். நினைவுத்துணுக்கு முடிவதற்கு முன்பே நம்மால் இமயமலைக்கோ, வேறு உலகத்திற்கோ, சந்திரனுக்கோ கூடச் சென்றுவிடமுடியும்.

அதையும் தாண்டிய வேகம் எது? அதுதான் சொல்

வாழ்வில் பல இடங்களில் நாம் பேசியதற்காக மன்னிப்பு கேட்கும் பொழுது, 'யோசிக்காம பேசிட்டேன்' என்போம்.

சொல், சிந்தனை முடிந்து வரும் முன்பே சில வேளைகளில் கிளம்பிச் சென்றுவிடும். ஆகையால் இராமன் அம்பு சொல் மாதிரி கிளம்பிச்சென்றதாம். (இது புலவர் கீரன் காட்டிய நயம்)


‘சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசரம்’ என்கிறான் கம்பன்.

யாருடைய சொல்?
நிறைமொழி  மாந்தரின்
சாபச் சொற்களைப் போல  (விசுவாமித்திர மகரிஷி போன்றவர்களின் சாபச்சொல் எப்படி உடனே தவறாமல் பலிக்குமோ அதுபோல் அவ்வளவு கடும் வேகமாக) இருந்ததாம் அந்த சுடுகின்ற அம்பு (சுடுசரம்)!

இராமனுடைய அம்புக்குக் கடுமை, வேகம், அருமை ஆகிய பண்புகள் உண்டு என்பதை உணர்த்தினார் கம்பர்.

கரிய செம்மல் (இதில் ஒரு நயம் கருமை-செம்மை) என்று கருப்பான இராகவனைக் குறிப்பிட்டவர் தாடகையின் பண்புக்கு இணையாக அல் (இருள்) ஒக்கும் என்று நிற உவமை சொல்கிறார்.

அந்த அம்பு எப்படிச் சென்றது?

‘கல்லாப் புல்லோர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என’ – கல்லாத மூடர்களுக்கு அறிவாற்றல் நிறைந்தவர்கள் எவ்வளவுதான் புத்திமதி சொன்னாலும் அது அவர்கள் மனதில் கொஞ்சம் கூடத் தங்காமல் எப்படி உடனே போய்விடுமோ அதுபோல ராமபாணம் தாடகையின் மார்பை ஊடுருவிச் சென்று விட்டதாம்.

அந்த மார்பு எப்படிப்பட்டது? ‘வயிரக் குன்றக் கல்லொக்கும் நெஞ்சு.’ அந்த நெஞ்சையும் ஊடுருவிச் சென்றுவிடுகிறது ராம பாணம். கம்பர் மற்றொரு காண்டத்தில் வரப்போகும் ஏழு மராமத்தை துளைத்துச் செல்லும் பகுதிக்கு , இராமனின் முதல் பாணத்திலேயே முன்னுரை கொடுக்கிறார்.

அறிவாற்றல் மிக்க  மேலோர் கூறும் அறம் உள்ளத்தில்  நிலை பெறாது ஒரு காதில் புகுந்து மறுகாது வழிப்போவது போல, தாடகையின் முதுகுப்புறம் ராமனது அம்பு விரைந்து சென்றது என்ற உவமை நயம் உணரத்தக்கது.

இந்தப்பாடலை நிறையப்பேர் ஒரு குறிப்பிட்ட நயத்தை ரசிப்பார்கள்.

சொல்லாய் ஆரம்பித்து பொருளாய்ப் போயிற்று.

சொல் (அம்பு) தாடகை உட்புகுந்து (அறிவிலார்க்கு புலப்படாத) பொருளாய்ச் சென்றது என்பதே அது.

என்னே நயம்!!

சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம், கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது, அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என, போயிற்று அன்றே!


தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | தசரதரிடம் விஸ்வாமித்திரர் உதவி கோறுதல் | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Viswamithra seeking Dasaratha's help

கம்ப இராமாயண தமிழ்ச்சாரல்

கையடை படலம்


தசரதரிடம் விஸ்வாமித்திரர் உதவி கோறுதல்

தசரதன், முனிவர் எதிரே நின்று கை கூப்பி வணங்கி, "தங்கள் ஆணையை எதிர்பார்த்து நிற்கின்றேன்" என்றான்.
உடனே முனிவர் பின்வருமாறு பேசினார்.
"அரசே! தவம் செய்வோருக்குக் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்றும் அகப்பகைகள் இருந்துகொண்டு அவருக்குத் துன்பம் இழைப்பது போல வனத்துள் நான் இயற்றும் தவ வேள்விக்கு இடையூறாகப் புறப் பகைவர்களாகிய அரக்கர்கள் தவத்தைத் தொடர விடுவதில்லை. அவர்களை ஒழித்து தடை வராதபடி காக்க உன்னுடைய பிள்ளைகள் நால்வரில் கரிய செம்மல் ஒருவனைத் தருவாயாக"

இவ்வாறு விஸ்வாமித்திரர் கூறினார்.


பாடல்

தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு 
இடையூறா, தவம் செய்வோர்கள் 
வெருவரச் சென்று அடை காம வெகுளி என
நிருதர் இடை விலக்கா வண்ணம்,
"செருமுகத்துக் காத்தி" என, நின் சிறுவர்
நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி என, உயிர் இரக்கும்
கொடுங் கூற்றின், உளையச் சொன்னான்


பொருள்

தருவனத்துள்  யான் இயற்றும் = மரங்கள் நிறைந்துள்ள காட்டில் நான் செய்கின்ற;
தவவேள்விக்கு இடையூறா = பெரிய யாகத்துக்கு (நிஷ்காம்யவேள்வி என்பர்) இடையூறாக;
தவம்  செய்வோர்கள்  வெருவர = தவம் செய்பவர்கள் அஞ்சும்படியாக;
சென்று அடைகாம வெகுளி என = அவர்தம் மனத்தைச் சென்று சேர்ந்த காமம் வெகுளி மயக்கங்களைப் போல;
நிருதர் இடைவிலக்காவண்ணம் = அரக்கர்கள் கெடுக்காதபடி;
செருமுகத்துக் காத்தி என = அவர்களோடு செய்யும் போர்முகத்திலே காத்தருள்வாயாக என;
நின் சிறுவர் நால்வரினும் = உன்புத்திரர்கள் நால்வர்களுள்;
கரிய செம்மல் ஒருவனை = கருமை நிறம் பொருந்திய செம்மலாகிய ஒப்பற்றவனை;
தந்திடுதி  என = அளித்திடுவாயாக என்று;
உயிர் இரக்கும் கொடும் கூற்றின் = உயிரைத் தாவெனக் கேட்கும் கொடிய கூற்றுவனைப் போல;
உளையச்சொன்னான் = மன்னன் மனம் வருந்தும்படி முனிவன் கூறினான்.


நயம்

கூற்றுவன் என்றால் எமன் என்று பொருள் படும். இங்கு அற்புதமான ஒர் உவமை மூலம் கவிச்சக்கரவர்த்தி விளக்குகிறார். ஒருவன் உத்தரவில்லாமல் நினைத்த நேரத்தில் உயிரைக் கொண்டுபோகும் எமன், திடீரென்று வந்து 'உன்னுடைய உயிரை எனக்குத் தர வேண்டும் என்று பிச்சை எடுப்பது போல் கேட்டால், அது எவ்வாறு இருக்குமோ, அதுபோல விசுவாமித்திரர் இப்போது கேட்டுக்கொண்டார்.

வேலொடு நின்றான் இடு என்றது போலாம்
கோலொடு நின்றான் இரவு
என்ற திருக்குறள் (அதிகாரம்:கொடுங்கோன்மை குறள் எண்:552) உவமையை இது நினைவூட்டுகிறது. விசுவாமித்திரன் வேண்டுதலைக் கேட்ட தசரதன் நடுங்கி ஒடுங்கி விட்டான்.

தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு 
இடையூறா, தவம் செய்வோர்கள் 
வெருவரச் சென்று அடை காம வெகுளி என
நிருதர் இடை விலக்கா வண்ணம்,
"செருமுகத்துக் காத்தி" என, நின் சிறுவர்
நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி என, உயிர் இரக்கும்
கொடுங் கூற்றின், உளையச் சொன்னான்

தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | கோசலை வயிற்றில் திருமால் அவதரித்தல் | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Womb of Kousalya Devi being blessed with Lord's Avatara

கம்ப இராமாயண தமிழ்ச்சாரல்

திரு அவதாரப் படலம்

திருமாலின் அவதாரமான ராமபிரான் அவதாரம் செய்ததைக்  கூறும் பகுதியாகும்.  இதில் தயரத  மன்னன்  மகப்  பேறின்றி   இருத்தலை வசிட்ட  முனிவரிடம்  கூறுதலும்.  வசிட்டர் தேவர்களுக்குத்  திருமால் அருளியதைச்  சிந்தித்தலும்  புதல்வரை அளிக்கும்  வேள்வி செய்யத் தயரதனுக்கு  வசிட்டர் கூறுதலும். கலைக்கோட்டு  முனிவரால் வேள்வி நடைபெறுதலும், வேள்வித்தீயில் எழுந்த பூதம் பிண்டம் கொண்டுதருதலும், அப்பிண்டத்தைத்   தயரதன்  தேவியர் மூவருக்கும் பகிர்ந்தளித்தலும், அதன் காரணமாகத் தேவியர்  கருவுறுதலும்  ராமன் முதலிய  நால்வரும் அவதரித்தலும், புதல்வர்களுக்கு வசிட்டர்  பெயர் சூட்டுதலும்  பிள்ளைகளின்  வளர்ச்சியும்-கல்விப்  பயிற்சியும்-யாவரும் போற்ற ராமன் இனிதிருத்தலும் விவரிக்கப்படுகின்றன

கோசலை வயிற்றில் திருமால் அவதரித்தல்

பாடல்

ஆயிடை, பருவம் வந்து அடைந்த எல்லையின்,
மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட,
வேய் புனர்பூசமும், விண்ணுளோர்களும்,
தூய கற்கடகமும், எழுந்து துள்ளவே,

சித்தரும், இயக்கரும், தெரிவைமார்களும்,
வித்தக முனிவரும், விண்ணுளோர்களும்,
நித்தமும், முறை முறை நெருங்கி ஆர்ப்புற,
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே.

பொருள்

ஆயிடை பருவம் வந்து அடைந்த எல்லையின் = மகப்பேற்றுக்குரிய பருவம் வந்து  சேர்ந்த அந்தக்காலத்தில்;

மா இரும மண்  மகள் மகிழ்வின் ஓங்கிட = மிகப்பெரிய  நிலமகள் மகிழ்ச்சியில் ஓங்கவும்;

வேய்புனர் பூசமும் = பொருந்திய ‘புனர்பூசம்’
என்னும் விண்மீனும்;

விண்ணுளோர்களும் = வானுலகில்  வாழும்
தேவர்களும்;

தூயகற்கடகமும் = தூய்மையானதாகிய கடக ராசியும்;

எழுந்து துள்ளவே = (மகிழ்ச்சியினால்) எழுந்து துள்ளி ஆடவும்;

சித்தர், இயக்கர் = தேவர்களுக்குள் ஒருவகையினர்;

தெரிவை = பெண்ணைக் குறிக்கிறது;

வித்தக முனிவரும் = அறிவில் சிறந்து  விளங்கும் முனிவர்களும்;

விண்ணுளோர்களும் = விண்ணுலகத்தில் உள்ளவர்களும்;

நித்தமும் முறைமுறை நெருங்கி ஆர்ப்புற = நித்திய சூரிகளும் முறைப்படி கூடி ஆரவாரம் செய்யவும்

தத்துறல் ஒழிந்து = வளர்ச்சிகுன்றல் இல்லாமல்;

நீள் தருமம் ஓங்கவே = நெடிய தருமதேவதை இடையீடின்றிப் பெருகி வளரவும்     

ஆயிடை, பருவம் வந்து அடைந்த எல்லையின்,
மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட,
வேய் புனர்பூசமும், விண்ணுளோர்களும்,
தூய கற்கடகமும், எழுந்து துள்ளவே,

சித்தரும், இயக்கரும், தெரிவைமார்களும்,
வித்தக முனிவரும், விண்ணுளோர்களும்,
நித்தமும், முறை முறை நெருங்கி ஆர்ப்புற,
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே.

தொடரும்...

அன்புடன்

நா. பிரசன்னலக்ஷ்மி

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | தசரதனின் சிறப்பு | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Dasaratha's Greatness

கம்ப இராமாயண தமிழ்ச்சாரல்

தசரதனின் சிறப்பு

கோசல நாட்டை ஆண்ட தசரத மன்னன் மன்னுயிர்களை தன்  உயிர் போல் காத்து வந்தான். அவனுடைய நீதி தவறாத ஆட்சியால் ஏழு உலகங்களையும் ஆண்டு வந்தான்.

பாடல்

தாயொக்கும் அன்பின் தவமொக்கும்
நலம் பயப்பின்
சேயொக்கும் முன் நின்று ஒரு செல்
கதி உய்க்கும் நீரால்
நோயொககும் என்னின்
மருந்தொக்கும் நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால் அறிவு ஒக்கும்
எவர்க்கும் அன்னான்

பொருள்

தாயொக்கும்  அன்பின் = அன்பு செலுத்துவதில் பெற்ற தாயைப் போலிருப்பான்

தவமொக்கும் நலம் பயப்பின்=
எல்லோருக்கும் நன்மைகளைச் செய்வதால் தவத்தைப்  போலிருப்பான்

சேயொக்கும் முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால் =
எல்லோரையும் முன்னால் இருந்து நல்லவழியில் செலுத்துவதால் மகனைப் போலிருப்பான்

நோயொககும் என்னின் மருந்தொக்கும் =
தீமை செய்பவர்களுக்கு நோயைப் போலிருப்பான் எனினும் மருந்தைப் போலவும் இருப்பான்

நுணங்கு கேள்வி ஆயப் புகுங்கால் அறிவு ஒக்கும் =
சூட்சுமமான நூல்களை ஆராயும் போது அறிவைப் போலிருப்பான்

எவர்க்கும் அன்னான் =
எல்லோருக்கும்  தசரத சக்கரவர்த்தி

தாயொக்கும் அன்பின் தவமொக்கும்
நலம் பயப்பின்
சேயொக்கும் முன் நின்று ஒரு செல்
கதி உய்க்கும் நீரால்
நோயொககும் என்னின்
மருந்தொக்கும் நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால் அறிவு ஒக்கும்
எவர்க்கும் அன்னான்


தொடரும்...


அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | கோசலை நாட்டின் வளம் | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Fertile Kosala Country

கம்ப இராமாயண தமிழ்ச்சாரல்

கோசலை நாட்டின் வளம்

இயற்கை அழகு வாய்ந்த நாட்டின் ஆரமாய் விளங்குவது ஆறே ஆகும்.

ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்பது ஆன்றோர் வாக்கு.

நதியே நாட்டை அழகு செய்கின்றது. நீர்வளம் அமைந்த நிலமே நாடாகுமென்று வள்ளுவர் போற்றுகிறார்.

நாடென்ப நாட வளந்தரு நாடல்ல
நாட வளத்தகு நாடு
                                                  (குறள் 739)


மக்கள் மெய் வருத்தப் பயனளிக்கும் நிலம் நாடாகாதென்றும், இயற்கையின் வளம் சுரக்கும் இனிய நிலமே நாடாகுமென்றும் வள்ளுவர் கூறும் கருத்து நன்கு விளங்குகின்றது.

நதியே நாட்டு உயிராக இருந்ததால் அதன் பெருமையை வள்ளுவர் போற்றுகிறார்.

கம்பன் கோசல நாட்டை ஆற்றினை அணியாக அணிந்த நாடு என்கிறார்.

இதன் மூலமாக அந்த நிலத்தின் தன்மை விளங்குகிறது.

கோசலம் என்றால் மயில். மயில்கள் நிறைய உள்ள நாடு. மயில் நிறைய இருக்கிறது என்றால், மழை நன்றாக பெய்கிறது என்று அர்த்தம். மழை பெய்தால், பயிர் விளையும், பசி இருக்காது, கலையும் பக்தியும் நிறைந்து இருக்கும். சண்டை சச்சரவு இருக்காது.

அந்த நாட்டின் மக்கள் நெறி பிறழாமல் வாழ்ந்தார்கள்.

மனிதர்களை குற்றங்களுக்கு உட்படுத்துவது புலன்கள், அதாவது அவை தூண்டும் ஆசைகள்.

புலன்கள் அதற்குரிய பொருளை பார்த்துவிட்டால் உடனே அம்பு போல் பாயும். பாய்கின்ற அம்பு  இலக்கை தைக்கும்; விட்ட அம்பை திருப்பி பிடிக்க முடியாது;

ஐம்பொறிகளை அம்பு என்கிறார் கம்பர். தைப்பதால்; விட்டால் பிடிக்க முடியாது என்பதால்; வேகமாக செல்வதால்.

பெண்களுக்கு கண்கள், ஆண்களின் உணர்ச்சிகளை தூண்டும் வலிமையுடையவை.
பெண்களின் கண்கள் நெறியில் நிற்கா விட்டால், ஆண்களின் ஐம்பொறிகளும் நிலையில் நில்லாது.

அப்படிப்பட்ட வலிமை பெற்ற கண்கள், கோசலை நாட்டில் ஒரு நெறியில் நின்றன.

பாடல்

ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்
காசுஅலம்பும் முலையவர் கண்எனும்
பூசல் அம்பும் நெறியின் புறஞ் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவோம்

        (ஆற்றுப்படலம் பாடல் 12)

என்கிறார் கம்பர்.

பொருள்

சலம் = நடுக்கம், உதறுதல், அலைபாயுதல்
ஆ + சலம் = மிகுந்த (அ) பெரிய சலம்.

புலன்கள் ஒன்றில் ஒன்றுக்கு தாவிக் கொண்டே இருக்கும். (விளக்கிருக்க தீ தேடும் மனம்)

புரி = புரிகின்ற, செல்கின்ற, அலைகின்ற

ஐம் பொறி = ஐந்து பொறிகளான

வாளியும் = அம்புகளும்

காசு அலம்பு = வைரம் வைடூரியம் போன்ற விலை உயர்ந்த மணிகளால் ஆன கழுத்தில் அணியும் அணிகலன்கள் அசைந்து ஆட

காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து என்கிறது  திருப்பாவை.

முலையவர் = மார்பங்களை உடையவர்  (பெண்கள்)

கண் எனும் = கண்கள் என்ற

பூசல் அம்பும் = சண்டை பிடிக்கும் அம்பும்.

நெறியின் புறம் செலாக் = வழி தவறி செல்லாத

கோசலம் = கோசலம் என்ற நாட்டின்

புனை ஆற்று அணி கூறுவாம் = ஆற்றினை அணியாக அணிந்த நிலை கூறுவாம்.

அங்கு ஓடும் நதி, அந்த ஊருக்கு மாலை போட்ட மாதிரி இருக்கிறதாம்.

நயம்

ஒரு நாட்டின் வருணனைதான் என்றாலும் எவ்வளவு நுணுக்கமாக மக்களின் வாழ்வியல் நெறியை விளக்குகிறார்.

எவ்வளவோ வளங்களைப் பற்றி பின்னே கூறினாலும்,  அவை எல்லாவற்றையும் விட மிக சிறந்த வளம் எது என்றால்,  அம்பும் நெறியின் புறஞ் செலாக் கோசலம் என்பதுதான்.

எனவே, மக்களாக வாழப் பிறந்தவர்கள்,  மிக பண்புடையவர்களாக,  பொறிபுலன்களை அடக்கி ஆள்பவராக வாழ்வது தான் அவர்கள் சிறந்தவர் ஆவதற்குரிய அடிப்படையாகும், என்பதை இப்பாடலின் வழியாக கம்பர் மெய்ப்பித்துக் காட்டியிருப்பதை உணர முடிகிறது.

ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்
காசுஅலம்பும் முலையவர் கண்எனும்
பூசல் அம்பும் நெறியின் புறஞ் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவோம்


தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி