Monday, August 10, 2020

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | தசரதனின் ஒற்றை நரைமுடி | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Dasaratha's Grey hair

 

கம்பராமயண தமிழ்ச் சாரல்

 

அயோத்யா காண்டம் - மந்திரப்படலம்

 

ஒரு நாள் தசரதன் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தான். காதோரம் ஒரே ஒரு நரைமுடி. அந்த நரை முடி அவனிடம் ஏதோ சொல்லுவது போல் இருந்தது. உன்னிப்பாக கேட்டான்.

 

'மன்னனே, நீ இந்த அரசாட்சியை உன் மகனிடம் தந்து விட்டு, கானகம் சென்று தவம் செய்யச் செல் ' என்று சொல்லியது.

 

தசரதனிடம் அந்த நரை முடி சொன்ன பாடல் ...

 

பாடல்

 

மன்னனே! அவனியை

மகனுக்கு ஈந்து, நீ

பன்ன அருந்தவம்

புரி பருவம் ஈதுஎன,

கன்ன மூலத்தினில்

கழற வந்தென,

மின் எனக் கருமை போய்

வெளுத்தது - ஓர் மயிர்.

 

பொருள்

 

மன்னனே! = மன்னவனே

 

அவனியை = இந்த உலகத்தை, இந்த அரசை

 

மகனுக்கு ஈந்து, = உன் மகனிடம் தந்து விட்டு

 

நீ = நீ

 

பன்ன அருந்தவம் = செய்வதற்கு அறிய தவம்

 

புரி = புரிய, செய்ய

 

பருவம் ஈது = சரியான காலம் இது

 

என = என

 

கன்ன மூலத்தினில் = கன்னத்தின் ஓரத்தில்

 

கழற = அதட்டி சொல்ல, கண்டித்து சொல்ல

 

வந்தென = வந்தது போல வந்தது

 

மின் எனக் = மின்னலைப் போல, வெண்மையாக, ஒரு ஒளிக் கற்றை போல

 

கருமை போய் = கருமை நிறம் போய்

 

வெளுத்தது  = வெண்மையாக வந்தது

 

ஓர் மயிர் = ஒரே ஒரு முடி

 

 

தசரதனின் காதோரம் தோன்றிய இந்த ஒற்றை நரைமுடி பின்பு இராவணனின் பத்து தலை அகந்தையை வீழச்செய்தது

 

தொடரும்...

 

அன்புடன்

நா. பிரசன்னலஷ்மி

No comments: