கம்ப ராமாயண தமிழ்ச்சாரல்
அயோத்யா
காண்டம் - மந்திரை
சூழ்ச்சிப் படலம்
இராமனுக்கு
முடிசூட்டு விழா என்பதை அறிந்த
கோசலையின் மனநிலை
தசரதன்
இராமனின் முடிசூட்டு நாள் குறிக்கக் கோள்கள்
அறிந்த சோதிடரை கூட்டி சென்றான்.
இச்செய்தி
சூறைக்காற்று போல நகர் முழுவதும்
பரவியது. இராமன்பால் அன்பு கொண்ட நங்கையர் நால்வர் கோசலையிடம் சென்றனர். அவர்களது மட்டற்ற மகிழ்ச்சியை கண்டு ஆனந்தமடைந்த கோசலை காரணம் வினாவினாள்.
அவர்கள்,
“மன்னன், உன் மகனுக்கு மணிமுடி
சூட்டுகிறான்” என்று
மனம் மகிழ்ந்து உரைத்தனர்.
அந்த
நங்கையர் கூறிய நற்செய்தி, கோசலைக்கு தென்றலின் சுகத்தை தேடித் தந்தன, அதே சமயத்தில் வாடையின்
சூடும் அவளைச் சுட்டது.
பாடல்
'சிறக்கும்,
செல்வம் மகற்கு' என, சிந்தையில்
பிறக்கும்
பேர் உவகைக் கடல் பெட்பு அற,
வறக்கும்
மா வடவைக் கனல் ஆனதால்
துறக்கும்
மன்னவன் என்னும் துணுக்கமே.
பொருள்
சிறக்கும்
= சிறப்பினை தரும்;
செல்வம்
= நாடு என்று கொள்ளலாம்;
மகற்கு
= மகன் இராமனுக்கு;
என
= என்று;
சிந்தையில்
= சிந்தனையில், மனதில், கற்பனையில்;
பிறக்கும்
பேர் உவகைக் கடல் = தோன்றிய பெரிய மகிழ்ச்சிக் கடல்;
பெட்பு
அற = பெருமை இன்றி போக;
வறக்கும்
= வரள வைக்கும் (காய்ந்து போக வைக்கும்);
மா
= பெரிய;
வடவைக்
கனல் = கடலை வற்ற வைக்கும்
தீ;
ஆனதால்
= ஆனதால்
துறக்கும்
= துறக்கும், இழக்கும்;
மன்னவன்
= தசரதன்;
என்னும்
துணுக்கமே = என்ற அச்சமானது.
நயம்
வடவைக்
கனல் அவளைத் தீண்டியது, தசரதன் ஆட்சியை விட்டு நீங்குகிறான் என்பதால்.
கடல்
நடுவே வடவாக்கினி (வடல் + அக்கினி) ஒன்று உள்ளதாக நமது புராணங்களில் நம்பப்படுகிறது. கடல்
நீரின் அளவு அதிகமாகும் போது,
வடவை கனல் அதிகப்படியான நீரை
வற்றச் செய்துவிடும் (ஊழி காலத்தில் வடவை
கனல் மிகப் பெரிதாக உருவெடுத்து அத்தனை கடலையும் வற்ற வைத்துவிடும் என்பது
நம்பிக்கை)
இராமனுக்கு
முடி சூட்டுவது என்றால் அந்த முடி தசரதன்
தலையில் இருந்து இறங்க வேண்டும். தசரதன் முடி துறந்தால் தான்
இராமன் முடி சூட முடியும்.
இராமனுக்கு
முடி என்று கேட்ட கோசலை இன்பம், மகிழ்ச்சி கடல் மாதிரி இருந்ததாம்.
உடனே
நினைத்துப் பார்க்கிறாள் ... இராமன் முடி சூட வேண்டுமானால்
தசரதன் முடி துறக்க வேண்டுமே,
என்று நினைக்கிறாள்.
அப்படி
நினைத்தவுடன் அவளின் சந்தோஷக் கடல் வடவைக் கனல்
எழுந்து கடலை வற்ற வைப்பது
மாதிரி வற்றிப் போய் விட்டது.
இராமன்
முடி சூட்டுவதில் கோசலைக்கு இன்பம் தான் என்றாலும், அதில்
அவள் பட்ட சின்ன துன்பத்தை
, இவ்வளவு நுணுக்கமாக கையாளுவது கம்பனுக்கே சாத்தியம். பின் வரப்போகும் பல
மாற்றங்களை குறிப்பால் உணர்த்துகிறாரோ?
'சிறக்கும்,
செல்வம் மகற்கு' என, சிந்தையில்
பிறக்கும்
பேர் உவகைக் கடல் பெட்பு அற,
வறக்கும்
மா வடவைக் கனல் ஆனதால்
துறக்கும்
மன்னவன் என்னும் துணுக்கமே.
தொடரும்...
அன்புடன்
நா.
பிரசன்னலக்ஷ்மி