Monday, July 6, 2020

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | தசரதரிடம் விஸ்வாமித்திரர் உதவி கோறுதல் | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Viswamithra seeking Dasaratha's help

கம்ப இராமாயண தமிழ்ச்சாரல்

கையடை படலம்


தசரதரிடம் விஸ்வாமித்திரர் உதவி கோறுதல்

தசரதன், முனிவர் எதிரே நின்று கை கூப்பி வணங்கி, "தங்கள் ஆணையை எதிர்பார்த்து நிற்கின்றேன்" என்றான்.
உடனே முனிவர் பின்வருமாறு பேசினார்.
"அரசே! தவம் செய்வோருக்குக் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்றும் அகப்பகைகள் இருந்துகொண்டு அவருக்குத் துன்பம் இழைப்பது போல வனத்துள் நான் இயற்றும் தவ வேள்விக்கு இடையூறாகப் புறப் பகைவர்களாகிய அரக்கர்கள் தவத்தைத் தொடர விடுவதில்லை. அவர்களை ஒழித்து தடை வராதபடி காக்க உன்னுடைய பிள்ளைகள் நால்வரில் கரிய செம்மல் ஒருவனைத் தருவாயாக"

இவ்வாறு விஸ்வாமித்திரர் கூறினார்.


பாடல்

தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு 
இடையூறா, தவம் செய்வோர்கள் 
வெருவரச் சென்று அடை காம வெகுளி என
நிருதர் இடை விலக்கா வண்ணம்,
"செருமுகத்துக் காத்தி" என, நின் சிறுவர்
நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி என, உயிர் இரக்கும்
கொடுங் கூற்றின், உளையச் சொன்னான்


பொருள்

தருவனத்துள்  யான் இயற்றும் = மரங்கள் நிறைந்துள்ள காட்டில் நான் செய்கின்ற;
தவவேள்விக்கு இடையூறா = பெரிய யாகத்துக்கு (நிஷ்காம்யவேள்வி என்பர்) இடையூறாக;
தவம்  செய்வோர்கள்  வெருவர = தவம் செய்பவர்கள் அஞ்சும்படியாக;
சென்று அடைகாம வெகுளி என = அவர்தம் மனத்தைச் சென்று சேர்ந்த காமம் வெகுளி மயக்கங்களைப் போல;
நிருதர் இடைவிலக்காவண்ணம் = அரக்கர்கள் கெடுக்காதபடி;
செருமுகத்துக் காத்தி என = அவர்களோடு செய்யும் போர்முகத்திலே காத்தருள்வாயாக என;
நின் சிறுவர் நால்வரினும் = உன்புத்திரர்கள் நால்வர்களுள்;
கரிய செம்மல் ஒருவனை = கருமை நிறம் பொருந்திய செம்மலாகிய ஒப்பற்றவனை;
தந்திடுதி  என = அளித்திடுவாயாக என்று;
உயிர் இரக்கும் கொடும் கூற்றின் = உயிரைத் தாவெனக் கேட்கும் கொடிய கூற்றுவனைப் போல;
உளையச்சொன்னான் = மன்னன் மனம் வருந்தும்படி முனிவன் கூறினான்.


நயம்

கூற்றுவன் என்றால் எமன் என்று பொருள் படும். இங்கு அற்புதமான ஒர் உவமை மூலம் கவிச்சக்கரவர்த்தி விளக்குகிறார். ஒருவன் உத்தரவில்லாமல் நினைத்த நேரத்தில் உயிரைக் கொண்டுபோகும் எமன், திடீரென்று வந்து 'உன்னுடைய உயிரை எனக்குத் தர வேண்டும் என்று பிச்சை எடுப்பது போல் கேட்டால், அது எவ்வாறு இருக்குமோ, அதுபோல விசுவாமித்திரர் இப்போது கேட்டுக்கொண்டார்.

வேலொடு நின்றான் இடு என்றது போலாம்
கோலொடு நின்றான் இரவு
என்ற திருக்குறள் (அதிகாரம்:கொடுங்கோன்மை குறள் எண்:552) உவமையை இது நினைவூட்டுகிறது. விசுவாமித்திரன் வேண்டுதலைக் கேட்ட தசரதன் நடுங்கி ஒடுங்கி விட்டான்.

தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு 
இடையூறா, தவம் செய்வோர்கள் 
வெருவரச் சென்று அடை காம வெகுளி என
நிருதர் இடை விலக்கா வண்ணம்,
"செருமுகத்துக் காத்தி" என, நின் சிறுவர்
நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி என, உயிர் இரக்கும்
கொடுங் கூற்றின், உளையச் சொன்னான்

தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | கோசலை வயிற்றில் திருமால் அவதரித்தல் | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Womb of Kousalya Devi being blessed with Lord's Avatara

கம்ப இராமாயண தமிழ்ச்சாரல்

திரு அவதாரப் படலம்

திருமாலின் அவதாரமான ராமபிரான் அவதாரம் செய்ததைக்  கூறும் பகுதியாகும்.  இதில் தயரத  மன்னன்  மகப்  பேறின்றி   இருத்தலை வசிட்ட  முனிவரிடம்  கூறுதலும்.  வசிட்டர் தேவர்களுக்குத்  திருமால் அருளியதைச்  சிந்தித்தலும்  புதல்வரை அளிக்கும்  வேள்வி செய்யத் தயரதனுக்கு  வசிட்டர் கூறுதலும். கலைக்கோட்டு  முனிவரால் வேள்வி நடைபெறுதலும், வேள்வித்தீயில் எழுந்த பூதம் பிண்டம் கொண்டுதருதலும், அப்பிண்டத்தைத்   தயரதன்  தேவியர் மூவருக்கும் பகிர்ந்தளித்தலும், அதன் காரணமாகத் தேவியர்  கருவுறுதலும்  ராமன் முதலிய  நால்வரும் அவதரித்தலும், புதல்வர்களுக்கு வசிட்டர்  பெயர் சூட்டுதலும்  பிள்ளைகளின்  வளர்ச்சியும்-கல்விப்  பயிற்சியும்-யாவரும் போற்ற ராமன் இனிதிருத்தலும் விவரிக்கப்படுகின்றன

கோசலை வயிற்றில் திருமால் அவதரித்தல்

பாடல்

ஆயிடை, பருவம் வந்து அடைந்த எல்லையின்,
மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட,
வேய் புனர்பூசமும், விண்ணுளோர்களும்,
தூய கற்கடகமும், எழுந்து துள்ளவே,

சித்தரும், இயக்கரும், தெரிவைமார்களும்,
வித்தக முனிவரும், விண்ணுளோர்களும்,
நித்தமும், முறை முறை நெருங்கி ஆர்ப்புற,
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே.

பொருள்

ஆயிடை பருவம் வந்து அடைந்த எல்லையின் = மகப்பேற்றுக்குரிய பருவம் வந்து  சேர்ந்த அந்தக்காலத்தில்;

மா இரும மண்  மகள் மகிழ்வின் ஓங்கிட = மிகப்பெரிய  நிலமகள் மகிழ்ச்சியில் ஓங்கவும்;

வேய்புனர் பூசமும் = பொருந்திய ‘புனர்பூசம்’
என்னும் விண்மீனும்;

விண்ணுளோர்களும் = வானுலகில்  வாழும்
தேவர்களும்;

தூயகற்கடகமும் = தூய்மையானதாகிய கடக ராசியும்;

எழுந்து துள்ளவே = (மகிழ்ச்சியினால்) எழுந்து துள்ளி ஆடவும்;

சித்தர், இயக்கர் = தேவர்களுக்குள் ஒருவகையினர்;

தெரிவை = பெண்ணைக் குறிக்கிறது;

வித்தக முனிவரும் = அறிவில் சிறந்து  விளங்கும் முனிவர்களும்;

விண்ணுளோர்களும் = விண்ணுலகத்தில் உள்ளவர்களும்;

நித்தமும் முறைமுறை நெருங்கி ஆர்ப்புற = நித்திய சூரிகளும் முறைப்படி கூடி ஆரவாரம் செய்யவும்

தத்துறல் ஒழிந்து = வளர்ச்சிகுன்றல் இல்லாமல்;

நீள் தருமம் ஓங்கவே = நெடிய தருமதேவதை இடையீடின்றிப் பெருகி வளரவும்     

ஆயிடை, பருவம் வந்து அடைந்த எல்லையின்,
மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட,
வேய் புனர்பூசமும், விண்ணுளோர்களும்,
தூய கற்கடகமும், எழுந்து துள்ளவே,

சித்தரும், இயக்கரும், தெரிவைமார்களும்,
வித்தக முனிவரும், விண்ணுளோர்களும்,
நித்தமும், முறை முறை நெருங்கி ஆர்ப்புற,
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே.

தொடரும்...

அன்புடன்

நா. பிரசன்னலக்ஷ்மி

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | தசரதனின் சிறப்பு | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Dasaratha's Greatness

கம்ப இராமாயண தமிழ்ச்சாரல்

தசரதனின் சிறப்பு

கோசல நாட்டை ஆண்ட தசரத மன்னன் மன்னுயிர்களை தன்  உயிர் போல் காத்து வந்தான். அவனுடைய நீதி தவறாத ஆட்சியால் ஏழு உலகங்களையும் ஆண்டு வந்தான்.

பாடல்

தாயொக்கும் அன்பின் தவமொக்கும்
நலம் பயப்பின்
சேயொக்கும் முன் நின்று ஒரு செல்
கதி உய்க்கும் நீரால்
நோயொககும் என்னின்
மருந்தொக்கும் நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால் அறிவு ஒக்கும்
எவர்க்கும் அன்னான்

பொருள்

தாயொக்கும்  அன்பின் = அன்பு செலுத்துவதில் பெற்ற தாயைப் போலிருப்பான்

தவமொக்கும் நலம் பயப்பின்=
எல்லோருக்கும் நன்மைகளைச் செய்வதால் தவத்தைப்  போலிருப்பான்

சேயொக்கும் முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால் =
எல்லோரையும் முன்னால் இருந்து நல்லவழியில் செலுத்துவதால் மகனைப் போலிருப்பான்

நோயொககும் என்னின் மருந்தொக்கும் =
தீமை செய்பவர்களுக்கு நோயைப் போலிருப்பான் எனினும் மருந்தைப் போலவும் இருப்பான்

நுணங்கு கேள்வி ஆயப் புகுங்கால் அறிவு ஒக்கும் =
சூட்சுமமான நூல்களை ஆராயும் போது அறிவைப் போலிருப்பான்

எவர்க்கும் அன்னான் =
எல்லோருக்கும்  தசரத சக்கரவர்த்தி

தாயொக்கும் அன்பின் தவமொக்கும்
நலம் பயப்பின்
சேயொக்கும் முன் நின்று ஒரு செல்
கதி உய்க்கும் நீரால்
நோயொககும் என்னின்
மருந்தொக்கும் நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால் அறிவு ஒக்கும்
எவர்க்கும் அன்னான்


தொடரும்...


அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | கோசலை நாட்டின் வளம் | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Fertile Kosala Country

கம்ப இராமாயண தமிழ்ச்சாரல்

கோசலை நாட்டின் வளம்

இயற்கை அழகு வாய்ந்த நாட்டின் ஆரமாய் விளங்குவது ஆறே ஆகும்.

ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்பது ஆன்றோர் வாக்கு.

நதியே நாட்டை அழகு செய்கின்றது. நீர்வளம் அமைந்த நிலமே நாடாகுமென்று வள்ளுவர் போற்றுகிறார்.

நாடென்ப நாட வளந்தரு நாடல்ல
நாட வளத்தகு நாடு
                                                  (குறள் 739)


மக்கள் மெய் வருத்தப் பயனளிக்கும் நிலம் நாடாகாதென்றும், இயற்கையின் வளம் சுரக்கும் இனிய நிலமே நாடாகுமென்றும் வள்ளுவர் கூறும் கருத்து நன்கு விளங்குகின்றது.

நதியே நாட்டு உயிராக இருந்ததால் அதன் பெருமையை வள்ளுவர் போற்றுகிறார்.

கம்பன் கோசல நாட்டை ஆற்றினை அணியாக அணிந்த நாடு என்கிறார்.

இதன் மூலமாக அந்த நிலத்தின் தன்மை விளங்குகிறது.

கோசலம் என்றால் மயில். மயில்கள் நிறைய உள்ள நாடு. மயில் நிறைய இருக்கிறது என்றால், மழை நன்றாக பெய்கிறது என்று அர்த்தம். மழை பெய்தால், பயிர் விளையும், பசி இருக்காது, கலையும் பக்தியும் நிறைந்து இருக்கும். சண்டை சச்சரவு இருக்காது.

அந்த நாட்டின் மக்கள் நெறி பிறழாமல் வாழ்ந்தார்கள்.

மனிதர்களை குற்றங்களுக்கு உட்படுத்துவது புலன்கள், அதாவது அவை தூண்டும் ஆசைகள்.

புலன்கள் அதற்குரிய பொருளை பார்த்துவிட்டால் உடனே அம்பு போல் பாயும். பாய்கின்ற அம்பு  இலக்கை தைக்கும்; விட்ட அம்பை திருப்பி பிடிக்க முடியாது;

ஐம்பொறிகளை அம்பு என்கிறார் கம்பர். தைப்பதால்; விட்டால் பிடிக்க முடியாது என்பதால்; வேகமாக செல்வதால்.

பெண்களுக்கு கண்கள், ஆண்களின் உணர்ச்சிகளை தூண்டும் வலிமையுடையவை.
பெண்களின் கண்கள் நெறியில் நிற்கா விட்டால், ஆண்களின் ஐம்பொறிகளும் நிலையில் நில்லாது.

அப்படிப்பட்ட வலிமை பெற்ற கண்கள், கோசலை நாட்டில் ஒரு நெறியில் நின்றன.

பாடல்

ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்
காசுஅலம்பும் முலையவர் கண்எனும்
பூசல் அம்பும் நெறியின் புறஞ் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவோம்

        (ஆற்றுப்படலம் பாடல் 12)

என்கிறார் கம்பர்.

பொருள்

சலம் = நடுக்கம், உதறுதல், அலைபாயுதல்
ஆ + சலம் = மிகுந்த (அ) பெரிய சலம்.

புலன்கள் ஒன்றில் ஒன்றுக்கு தாவிக் கொண்டே இருக்கும். (விளக்கிருக்க தீ தேடும் மனம்)

புரி = புரிகின்ற, செல்கின்ற, அலைகின்ற

ஐம் பொறி = ஐந்து பொறிகளான

வாளியும் = அம்புகளும்

காசு அலம்பு = வைரம் வைடூரியம் போன்ற விலை உயர்ந்த மணிகளால் ஆன கழுத்தில் அணியும் அணிகலன்கள் அசைந்து ஆட

காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து என்கிறது  திருப்பாவை.

முலையவர் = மார்பங்களை உடையவர்  (பெண்கள்)

கண் எனும் = கண்கள் என்ற

பூசல் அம்பும் = சண்டை பிடிக்கும் அம்பும்.

நெறியின் புறம் செலாக் = வழி தவறி செல்லாத

கோசலம் = கோசலம் என்ற நாட்டின்

புனை ஆற்று அணி கூறுவாம் = ஆற்றினை அணியாக அணிந்த நிலை கூறுவாம்.

அங்கு ஓடும் நதி, அந்த ஊருக்கு மாலை போட்ட மாதிரி இருக்கிறதாம்.

நயம்

ஒரு நாட்டின் வருணனைதான் என்றாலும் எவ்வளவு நுணுக்கமாக மக்களின் வாழ்வியல் நெறியை விளக்குகிறார்.

எவ்வளவோ வளங்களைப் பற்றி பின்னே கூறினாலும்,  அவை எல்லாவற்றையும் விட மிக சிறந்த வளம் எது என்றால்,  அம்பும் நெறியின் புறஞ் செலாக் கோசலம் என்பதுதான்.

எனவே, மக்களாக வாழப் பிறந்தவர்கள்,  மிக பண்புடையவர்களாக,  பொறிபுலன்களை அடக்கி ஆள்பவராக வாழ்வது தான் அவர்கள் சிறந்தவர் ஆவதற்குரிய அடிப்படையாகும், என்பதை இப்பாடலின் வழியாக கம்பர் மெய்ப்பித்துக் காட்டியிருப்பதை உணர முடிகிறது.

ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்
காசுஅலம்பும் முலையவர் கண்எனும்
பூசல் அம்பும் நெறியின் புறஞ் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவோம்


தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

Friday, July 3, 2020

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | நம்மாழ்வார் துதி | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Nammazhvar Thudhi

கம்ப இராமாயண தமிழ்ச்சாரல்

நம்மாழ்வார் துதி

பாடல்

தருகை நீண்ட
தயரதன்தான் தரும்
இரு கை வேழத்து இராகவன்தன் கதை

திரு கை வேலைத் தரைமிசைச் செப்பிட,
குருகை நாதன் குறை
கழல் காப்பதே.

பொருள்

தருகை (தரும் செய்கை, கொடை தன்மை, இல்லை என்று வரும் வறியவர்க்கு வாரி வழங்கி செழுமை படுத்துதல்)

நீண்ட (அதிகமான, மற்ற யாரையும் விட சிறந்த)

தயரதன்தான் தரும் (தசரத மன்னனின் தூய தமிழ் பதம் தயரதன்)

அத்தகு மன்னன் தரும் (பிறப்பித்து தரும்)

இரு கை வேழத்து (இரண்டு கைகள் உடைய யானையை போலே)

இராகவன் தன் கதை (அவ்வாறாக பட்ட இராகவன் என்ற இராம பிரான் அவர்களின் கதை)

திரு கை வேலைத் தரைமிசைச் செப்பிட  (வேலை: கடல்; தரை: பூமி, மிசை: சூழ்ந்து; கடல் சூழ்ந்த இந்த உலகில் செப்பிட: உரைத்திட)

குருகை நாதன் (திருக்குருகூரில் தோன்றிய தலைவராகிய நம்மாழ்வார்)

குறை கழல் காப்பதே (ஒலிக்கும்  சிலம்பு அணியபட்டிருக்கும்  திருவடி காக்க வேண்டும்!)

தருகை நீண்ட 
தயரதன்தான் தரும்
இரு கை வேழத்து
இராகவன்தன் கதை

திரு கை வேலைத் தரைமிசைச் செப்பிட,
குருகை நாதன் குறை
கழல் காப்பதே

தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

Thursday, July 2, 2020

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | காண்டங்களும் படலங்களும் | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Retelling of Rama Kathai - Divisions & Parts

கம்ப இராமயண தமிழ்ச்சாரல்

வால்மீகி முனிவர் வடமொழியில் எழுதிய இராமாயணத்தைத் தமிழில் 'இராமாவதாரம்' என்னும் பெயரில் காப்பியமாக்கியவர் கம்பர்.
இதனால் இவர் ஆக்கிய இராமனின் காதை கம்பராமாயணம் (கம்ப இராமாயணம்) என வழங்கப்படுகின்றது.

காப்பிய வளம், கற்பனைச் செறிவு, பாத்திரப் படைப்பு, இலக்கிய நயம் முதலியவற்றால் இந்த நூல் தமிழ் இலக்கியங்களில் தலையாய இடம் பெற்றுள்ளது.

தமிழ்ப் பண்பாட்டை இந்த நூலில் வரும் பல்வேறு மக்கள் மூலமும் காட்சிகள் மூலமும் சித்தரித்து, ஒப்பிட்டு, விளக்கி, வால்மீகி படைத்த கதையின் போக்கை தமிழ்ப்பண்பாட்டு இழையோட கம்பர் இந்தக் காப்பியத்தை உருவாக்கியுள்ளார்.

கம்ப இராமாயணம், பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களாகப் பிரிக்கபட்டுள்ளது.

காண்டங்கள் என்பவை காப்பியத்தின் பெரும்பிரிவுகளைக் குறிக்கும்.

ஒவ்வொரு காண்டமும் உட்பிரிவுகளைக் கொண்டிருக்கும். அத்தகு உட்பிரிவுகளுக்குப் படலம் என்று பெயர்.

இந்த ஆறு காண்டங்களில் 123 படலங்களும், 10,000த்திற்கு மேற்பட்ட பாடல்களும் உள்ளன.


பாலகாண்டம்

'பால' என்பது தோற்ற வரலாற்றைக் குறிப்பதாகும். இராமனது இளவயது வாழ்வைக் குறிப்பதனால் இது பாலகாண்டம் என வழங்கப்பட்டது. பாலகாண்டம் இருபத்துநான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.


பாயிரம்

1) ஆற்றுப் படலம்
2) நாட்டுப் படலம்
3) நகரப் படலம்
4) அரசியற் படலம்
5) திரு அவதாரப் படலம்
6) கையடைப் படலம்
7) தாடகை வதைப் படலம்
8) வேள்விப் படலம்
9) அகலிகைப் படலம்
10) மிதிலைக் காட்சிப் படலம்
11) கைக்கிளைப் படலம்
12) வரலாற்றுப் படலம்
13) கார்முகப் படலம்
14) எழுச்சிப் படலம்
15) சந்திரசயிலப் படலம்
16) வரைக்காட்சிப் படலம்
17) பூக்கொய் படலம்
18) நீர் விளையாட்டுப் படலம்
19) உண்டாட்டுப் படலம்
20) எதிர்கொள் படலம்
21) உலாவியற் படலம்
22) கோலம்காண் படலம்
23) கடிமணப் படலம்
24) பரசுராமப் படலம்


அயோத்தியா காண்டம்

இராமன் அயோத்திக்கு அரசனாக முடிசூடத் தேர்ந்தெடுக்கப் படுவதிலிருந்து அயோத்தியா காண்டம் தொடங்குகிறது. அயோத்தியா காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

25) மந்திரப் படலம் (1)
26) மந்தரை சூழ்ச்சிப் படலம் (2)
27) கைகேயி சூழ்ச்சிப் படலம் (3)
28) நகர் நீங்கு படலம் (4)
29) தைலம் ஆட்டு படலம் (5)
30) கங்கைப் படலம் (6)
31) குகப் படலம் (7)
32) வனம் புகு படலம் (8)
33) சித்திரகூடப் படலம் (9)
34) பள்ளிப்படைப் படலம் (10)
35) ஆறுசெல் படலம் (11)
36) கங்கை காண் படலம் (12)
37) திருவடி சூட்டு படலம் (13)


ஆரணிய காண்டம்

இராமனுக்கு அரசுரிமை மறுக்கப்பட்டு கானகம் சென்று வாழும்நிலை ஏற்பட்டது. இக்கானக வாழ்வைக் குறித்து எழுவதனால் இது ஆரணிய காண்டம் எனப்பட்டது. ஆரணியம் என்றால் கானகம் (வனம், காடு) எனப் பொருள்படும். ஆரணிய காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டுள்ளது.

38) விராதன் வதைப் படலம் (1)
39) சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் (2)
40) அகத்தியப் படலம் (3)
41) சடாயு காண் படலம் (4)
42) சூர்ப்பணகைப் படலம் (5)
43) கரன் வதைப் படலம் (6)
44) சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் (7)
45) மாரீசன் வதைப் படலம் (8)
46) இராவணன் சூழ்ச்சிப் படலம் (9)
47) சடாயு உயிர் நீத்த படலம் (10)
48) அயோமுகிப் படலம் (11)
49) கவந்தன் படலம் (12)
50) சவரி பிறப்பு நீங்கு படலம் (13)


கிட்கிந்தா காண்டம்

சீதையைப் பிரிந்த இராம இலக்குவர்கள் தேடி அலைந்தனர். வழியில் கிட்கிந்தை எனும் வானரங்கள் ஆளும் நாட்டைச் சென்றடைந்தனர். அங்கே அனுமன், சுக்கிரீவன் ஆகியோரின் நட்பைப் பெற்றனர். பிறகு சுக்கிரீவனின் சகோதரனான வாலியைக் கொன்று கிட்கிந்தையின் ஆட்சிப் பொறுப்பை சுக்கிரீவனுக்கு அளித்தனர். அதனால் இது கிட்கிந்தா காண்டம் எனப்படுகிறது. கிட்கிந்தா காண்டம் பதினேழு படலங்களைக் கொண்டுள்ளது.

51) பம்பை வாவிப் படலம் (1)
52) அனுமப் படலம் (2)
53) நட்புக் கோட்படலம் (3)
54) மராமரப் படலம் (4)
55) துந்துபிப் படலம் (5)
56) கலன் காண் படலம் (6)
57) வாலி வதைப் படலம் (7)
58) தாரை புலம்புறு படலம் (8)
59) அரசியற் படலம் (9)
60) கார்காலப் படலம் (10)
61) கிட்கிந்தைப் படலம் (11)
62) தானை காண் படலம் (12)
63) நாட விட்ட படலம் (13)
64) பிலம் புக்கு நீங்கு படலம் (14)
65) ஆறு செல் படலம் (15)
66) சம்பாதிப் படலம் (16)
67) மயேந்திரப் படலம் (17)


சுந்தர காண்டம்

கம்பராமாயணத்துள் மிகவும் போற்றக்கூடிய பகுதியாக விளங்குவது சுந்தர காண்டமாகும். இங்கு சுந்தரன் என்று குறிக்கப் பெறுபவன் அனுமன் ஆவான். சொல்லின் செல்வன் என்று கம்பர் அனுமனது பெருமையை விளக்குகிறார். இராமனைப் பிரிந்த சீதைக்கும், சீதையைப் பிரிந்த இராமனுக்கும் இடையில் பிள்ளையைப் போலத் தூது சென்று அவர்தம் உள்ளக்கருத்தை உள்ளபடி உரைத்தபாங்கினாலேயே இதற்குச் சுந்தர காண்டம் எனப் பெயர் ஏற்பட்டது. சுந்தரம் என்றால் அழகு என்று பொருள். இன்றும் கணவன்-மனைவி ஆகிய தம்பதியரிடையே ஏற்படும் உளவேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு சுந்தர காண்டம் படிப்பது வழக்கமாக உள்ளது. சுந்தரகாண்டம் பதினான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.அதன் பதினான்கு படலங்கள் பின்வருமாறு:

68) கடல் தாவு படலம் (1)
69) ஊர் தேடு படலம் (2)
70) காட்சிப் படலம் (3)
71) உருக் காட்டு படலம் (4)
72) சூடாமணிப் படலம் (5)
73) பொழில் இறுத்த படலம் (6)
74) கிங்கரர் வதைப் படலம் (7)
75) சம்புமாலி வதைப் படலம் (8)
76) பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம் (9)
77) அக்ககுமாரன் வதைப் படலம் (10)
78) பாசப் படலம் (11)
79) பிணி வீட்டு படலம் (12)
80) இலங்கை எரியூட்டு படலம் (13)
81) திருவடி தொழுத படலம் (14)


யுத்தகாண்டம்

இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

82) கடல் காண் படலம் (1)
83) இராவணன் மந்திரப் படலம் (2)
84) இரணியன் வதைப் படலம் (3)
85) வீடணன் அடைக்கலப் படலம் (4)
86) ஒன்னார் வலிஅறி படலம் (5)
87) கடல் சீறிய படலம் (6)
88) வருணன் அடைக்கலப் படலம் (7)
89) சேது பந்தனப் படலம் (8)
90) ஒற்றுக் கேள்விப் படலம் (9)
91) இலங்கைகாண் படலம் (10)
92) இராவணன் வானரத்தானை காண் படலம் (11)
93) மகுட பங்கப் படலம் (12)
94) அணிவகுப்புப் படலம் (13)
95) அங்கதன் தூதுப் படலம் (14)
96) முதற் போர் புரி படலம் (15)
97) கும்பகருணன் வதைப் படலம் (16)
98) மாயா சனகப் படலம் (17)
99) அதிகாயன் வதைப் படலம் (18)
100) நாகபாசப் படலம் (19)
101) படைத் தலைவர் வதைப் படலம் (20)
102) மகரக்கண்ணன் வதைப் படலம் (21)
103) பிரமாத்திரப் படலம் (22)
104) சீதை களம்காண் படலம் (23)
105) மருத்துமலைப் படலம் (24)
106) களியாட்டுப் படலம் (25)
107) மாயா சீதைப் படலம் (26)
108) நிகும்பலை யாகப் படலம் (27)
109) இந்திரசித்து வதைப் படலம் (28)
110) இராவணன் சோகப் படலம் (29)
111) படைக் காட்சிப் படலம் (30)
112) மூலபல வதைப் படலம் (31)
113) வேல் ஏற்ற படலம் (32)
114) வானரர் களம் காண் படலம் (33)
115) இராவணன் களம் காண் படலம் (34)
116) இராவணன் தேர் ஏறு படலம் (35)
117) இராமன் தேர் ஏறு படலம் (36)
118) இராவணன் வதைப் படலம் (37)
119) மண்டோதரி புலம்புறு படலம் (38)
120) வீடணன் முடி சூட்டு படலம் (39)
121) பிராட்டி திருவடி தொழுத படலம் (40)
122) மீட்சிப் படலம் (41)
123) திருமுடி சூட்டு படலம் (42)


யாருக்கு என்ன எப்போது நேரவேண்டும், கிடைக்கவேண்டும், செய்யவேண்டும் என்று பரம்பொருளுக்கு தீர்க்கமாக  தெரியும்.

தானே பல்வேறு வடிவங்களில் சென்று அவர்களுக்கு ஆசிவழங்கி அதை அடையச் செய்வார். அடுத்த கணம் மறைந்து விடுவார்.

அதைப்போல, கம்பருக்கும் நமக்கும் உண்டான தொடர்பு பள்ளியில் படித்த இராமாயணம் என்றாலும், பின்னர் அங்கங்கே வாழ்வில் பல இடங்களில் அவரைபற்றி பேசுவதை கேட்டும், சில விவரங்களை ஏதேதோ புத்தகங்களில் யாரோ எழுதியதை படித்தும் - கம்பர் மேலும், ஸ்ரீ இராமர் மேலும்,  ஒரு இனம் புரியாத பக்தி ஏற்பட்டது.

அப்படிப்பட்ட ஸ்ரீ இராமரை, கம்பர் காதலொடு பாடும் ஸ்ரீ இராகவனை, பற்றி எழுதும் பாக்கியம் எனக்கு வாழ்வில் கிடைத்தது அந்த பரம்பொருள்  அருளாலே தான்.

'எவருடைய அனுக்கிரக பலம் கொண்டு ஸ்ரீ ஹனுமான் விளையாட்டாகவே கடலை தாண்டி கடந்து, இலங்கையை அடைந்து, ராம பத்தினியை கண்டு,உரையாடி, அரக்கர்களின் அசோக வனத்தை கபளீகரம் செய்து, அக்ஷகுமாரன் முதலியோரை சம்ஹரித்து, பத்து தலையனை கண்டு உரையாடி, அவனது நகரத்திற்கு எரியூட்டி, மீண்டும் கடலை தாண்டி கடந்து, தென்திசை கடல் வரை தன்னுடன் சென்ற வானரர்களுடன் கூடி, எவரை நமஸ்கரித்தாரோ, அந்த ஸ்ரீ ராமச்சந்திரரை தொழுகிறேன்' 🙏

இதில் சில பாடல்களையும் அதன் சொற்சுவை பொருட்சுவை ஆகியவற்றை என்னால் இயன்ற வரை எழுதி பகிர்ந்துள்ளேன்.


தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி



The original version of Ramayana was written by Valmiki. 

Tamil Epic Rama-Avataram or Rama-Kathai, written by Kambar is not a verbal translation of the Sanskrit epic by Valmiki, but a retelling of the story of Lord Rama. This is generally referred as Kamba Ramayanam.

Kamba Ramayanam of Kambar is a Tamil epic of about 10,000 + stanzas. 

It is divided into 6 parts (called as kandams), and further divided into 123 sub-parts (called as padalams), and each padalam has many songs & verses.

Tuesday, June 30, 2020

கம்ப இராமாயண தமிழ்ச்சாரல் | Drizzles from Kamba Ramayanam Tamil Epic


கம்ப இராமாயண தமிழ்ச்சாரல்

கம்ப இராமாயணம் 1100  ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.

இராமாயணம் என்பதின் பொருள் "இராமனின் வழி".

எல்லாம் வல்ல திருமால்,  மானுடனாக அவதரித்து மானுடம் தவறாமல் வாழ்ந்து தெய்வ நிலையை அடைந்ததை விளக்குகிறது இராமாயணம்.

கம்பர் இராமனை "இருக்கை வேழத்து ராகவன்" என்று விளிக்கிறார்.

இராமாயணத்தில் திருமால் இராமனாகவும்,  ஆதிசேஷன் இலக்குவனாகவும்,  சக்கரம் பரதனாகவும்,  சங்கு சத்ருகனாகவும் கூறப்பட்டுள்ளது.

இராமன் "ஆபத்பாந்தவன் , "எளியாம் தன்மை பெற்றவன்".

கம்பர் பன்னிரு ஆழ்வார்களின் அனுபவத்தை... பக்தியை, இராமாயணத்தில் பயன்படுத்துகிறார்.

தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி